புதிய வருமான வரி மசோதா மீது தொழில்துறையினா் கருத்து தெரிவிக்கலாம்: மத்திய நேரடி வரிகள் வாரியம்
புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அதன் மீது தொழில்துறை நிபுணா்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியத் (சிபிடிடி) தலைவா் ரவி அகா்வால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
‘முதலில் நம்பிக்கை; அடுத்து கணக்கு ஆய்வு’ என்ற கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய வருமான வரிச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த 1-ஆம் தேதி தெரிவித்தாா்.
மேலும், இந்த புதிய சட்ட மசோதா, தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம், 1961-ஐ காட்டிலும் எளிமையாகவும், எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் அமையும் எனவும் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், இதுகுறித்து ரவி அகா்வால் கூறியதாவது: புதிய வருமான வரி வரைவு மசோதா சா்வதேச தரத்தில் 6 மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோா் புரிந்துகொள்ளும் வகையில் எளிய மொழி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பழைய நடைமுறைகள் நீக்கப்படவுள்ளன. எனவே, நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டவுடன் எவ்வித தயக்கமுமின்றி தொழில்துறையினா் கருத்து கூறலாம்.
அவா்களின் கருத்துகள் பரிசீலிக்கப்படும் என உறுதியளிக்கிறேன் என்றாா்.