செய்திகள் :

'ரூ.2,000 சேமிக்க ஆசைப்பட்டு, ரூ.75,000-த்தை விட்ட கதை...' - மருத்துவக் காப்பீட்டில் 'இதில்' கவனம்!

post image

``என்னுடைய வாடிக்கையாளர் ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தார். இந்த நான்கு ஆண்டில் ஒரு தடவைக்கூட, அவர் தவணையை 'மிஸ்' செய்தது இல்லை. சரியாக தவணைகளை கட்டிவிடுவார்.

கடந்த வாரம், அவரது மனைவிக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதற்கு அவருக்கு ஆன செலவு ரூ.1.5 லட்சம். ஆனால், என் வாடிக்கையாளருக்கு கிடைத்ததோ, வெறும் ரூ.75,000 மட்டும் தான். இவருக்கு முழு தொகையான ரூ.1.5 லட்சம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இவர் செய்த சின்ன தவறால் அந்த முழு தொகையும் கிடைக்கவில்லை" என்று நடந்த சம்பவத்தையும், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார் காப்பீட்டு ஆலோசகர் விஷ்ணு வர்தன்.

காப்பீட்டு ஆலோசகர் விஷ்ணு வர்தன்

என்னிடம் குறிப்பிட்ட அந்த வாடிக்கையாளர் காப்பீடு எடுக்கும்போதே, 'ரூம் ரென்ட் லிமிட்' பற்றி கூறியிருந்தேன். ரூம் ரென்ட் லிமிட் என்றால் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையின் வாடகை காப்பீட்டின் ஒரு பகுதியாக கிடைக்கும். இந்த வாடிக்கையாளர் எடுத்திருந்த ரூ.3 லட்ச காப்பீட்டிற்கு, அதன் 1 சதவிகிதமான ரூ.3,000 அறை வாடகையாக மருத்துவக் காப்பீட்டில் கிடைக்கும்.

ஆனால், இவர் மனைவி மருத்துவமனையில் தங்கியிருந்த அறையின் வாடகை ரூ.6,000. ஆக, காப்பீட்டின் ரூம் ரென்ட் லிமிட்டிற்கும், தங்கியிருந்த அறை வாடகைக்கும் 50 சதவிகித வித்தியாசம். இதனால், காப்பீட்டு தொகையிலும் 50 சதவிகிதம் கழிந்து ரூ.1.5 லட்சம் என முழு தொகையாக கிடைக்காமல், பாதி தொகையான 75,000 தான் கிடைத்துள்ளது.

இந்த விஷயம் எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு, என்னிடம் அறுவை சிகிச்சை குறித்து சொல்லவில்லை. அப்படி எதுவும் சொல்லியிருந்தால், இந்த சிக்கல் குறித்து அவரிடம் முன்பே கூறியிருப்பேன்.

இந்தக் காப்பீட்டை அவர் எடுக்கும்போதும், ரினிவல் செய்யும்போதும், 'ரூம் ரென்ட் லிமிட் குறைவாக இருக்கு சார்... காப்பீட்டை அப்டேட் செஞ்சுடுங்க' என்று பல முறை கூறியிருக்கிறேன். ஆனால், அவரோ எக்ஸ்ட்ரா ரூ.2,000 - 3,000 ஆகும் என்று 'வேண்டாம்' என்று கூறிவிட்டார். அதனால் தான், இப்போது அவருக்கு ரூ.75,000 நஷ்டம்.

காப்பீட்டு ஆலோசகரிடம் ஆலோசியுங்கள்!

ஒருவேளை, இந்த வாடிக்கையாளர் ரூ.7 லட்சத்திற்கு காப்பீடு எடுத்திருந்தால், ரூம் ரென்ட் ரூ.7,000 ஆகவும், ரூ.10 லட்சத்திற்கு காப்பீடு எடுத்திருந்தால், ரூம் ரென்ட் ரூ.10,000 ஆகவும் கிடைத்திருக்கும். இதற்காக, அவர் ஆண்டுக்கு எக்ஸ்ட்ரா ரூ.5,000 வரை தான் செலவு செய்வதாக இருந்திருக்கும்.

மருத்துவக் காப்பீடு எடுத்திருப்பவர்கள் உங்களது ரூம் ரெண்ட் லிமிட் எவ்வளவு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ரூம் ரென்ட் லிமிட் குறைவாக இருந்தால், ரினிவலின் போது பிரீமியம் தொகையை அதிகப்படுத்துங்கள்.

பெரும்பாலும், மக்கள் மருத்துவக் காப்பீட்டை செலவாகத் தான் பார்க்கிறார்கள். மருத்துவக் காப்பீட்டு என்பது செலவு அல்ல... முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இதனால், இதில் கவனம் தேவை.

நீங்கள் மருத்துவக் காப்பீடு எடுத்திருக்கிறீர்கள்... அதை பயன்படுத்தப்போகிறீர்கள் என்றால், ஒருமுறை உங்களது காப்பீட்டு ஆலோசகரிடம் கலந்தாலோசித்து கொள்ளுங்கள். அப்போது, என்ன சிக்கல் இருக்கிறது, என்ன செய்யலாம் என்பதை தெரிந்து, செயல்படலாம் மக்களே!

'விபத்தில் இறந்த மகன்... ரூ.400 கட்டாததால் ரூ.15 லட்சத்தை இழந்த குடும்பம்!'- வாகன காப்பீட்டில் கவனம்

'என்னுடைய கிளைன்ட் மகன் சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். கிளைன்ட்டின் குடும்பம் இறந்த மகனை தான் அவர்களது வாழ்வாதாரத்திற்கு மிகவும் நம்பி இருந்திருக்கிறது. அந்த மகன் வேலைக்கு போய் சம்பாதித்த... மேலும் பார்க்க