செய்திகள் :

Irfan : வீடியோ சர்ச்சை; வெளிநாட்டில் யூடியூபர் இர்ஃபான்... சென்னை திரும்பியதும் நடவடிக்கை பாயுமா?!

post image

தனது மனைவியின் பிரவசத்தையும், குழந்தையின் தொப்புள்கொடியை தானே வெட்டுவதும் போன்ற சர்ச்சை வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் யூடியூபர் இர்ஃபான் வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியதும் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

யூடியூபர் இர்ஃபான் தனது மனைவி ஆசிஃபாவின் பிரசவத்திற்காக சோழிங்கநல்லூரில் உள்ள ஓர் தனியார் மருத்துமனையில் அனுமதித்திருந்தார். அந்த நிலையில், பிரசவ நேரத்தின்போது நேரடியாக வீடியோ கேமராவுடன் பிரசவ அறைக்குச் சென்ற இர்ஃபான், மனைவியை அட்மிட் செய்தது, சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது தொடங்கி குழந்தை பிறப்பு, குழந்தையின் தொப்புள்கொடியை தானே கத்தரிகோலால் கட் செய்வது, செவிலியர்கள் கிளீன் செய்தபிறகு குழந்தையை தூக்கிக் கொஞ்சுவது என எல்லாவற்றையும் வீடியோக பதிவு செய்து தனது irfan views யூடியூப் சேனலில் பதிவிட்டார்.

இர்ஃபான்

இந்த வீடியோ சமூக வலைதளங்கள், செய்தி சேனல்களில் வைரலாக, விவகாரம் பெரிதாகியிருக்கிறது. `உரிய பயிற்சி-அனுபவம் இல்லாமல் கத்தரிக்கோலால் தாய்-சேயின் தொப்புள்கொடியை வெட்டியது தவறு; இதை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவர்கள் அனுமதித்தது மேலும் தவறு; அதை வியூஸ்களுக்காக வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டது மிகத் தவறான முன்னுதாரணம்' என மருத்துவர்களே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு மருத்துவத் துறை சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது.

தொடர்ந்து, மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் இளங்கோவன், `உரிய பயிற்சியின்றி மருத்துவ உபகரணங்களை பயன்படுத்திய இர்ஃபான் மீதும், அவரை பிரசவ அறைக்கு அனுமதித்த டாக்டர் நிவேதிதா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் டாக்டர் நிவேதிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இர்ஃபானுக்கும் சோழிங்கநல்லூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இர்ஃபான்

அதையடுத்து, இர்ஃபான் வீடியோ விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``இர்ஃபான் தன்னுடைய குழந்தையின் தொப்புள் கொடியை தானே அறுத்திருக்கிறார். அதை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் அனுமதித்திருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்க செயல். அறுவை சிகிச்சை நடக்கும் அறைக்குள் மருத்துவர் அல்லாத ஒருவர் சென்று, தொப்புள் கொடியை துண்டித்திருப்பதென்பது National Medical Commission Act 2021, பிரிவு 34, செக்சன் 1,2-படி மீறுவதாகும். மருத்துவச் சட்ட விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க டி.எம்.எஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

யூடியூபர் இர்ஃபான்

அவர் மட்டுமல்லாமல் அவரை மருத்துவமனைக்குள் அனுமதித்த பெண் மருத்துவர் நிவேதிதா, தனியார் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், நிவேதிதா மீது மருத்துவ பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மருத்துவ கவுன்சிலில் நோட்டீஸ் அளித்திருக்கிறோம். சட்ட ரீதியாகவும் துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. தவறு செய்தவர்களை இந்த அரசு நிச்சயம் தப்ப விடாது. இந்தமுறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும், அவரை விடமாட்டோம்!" என உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இர்ஃபானின் மனைவிக்கு பிரசவம் பார்த்த சோழிங்கநல்லூர் தனியார் மருத்துவமனைக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததுடன், 10 நாள்களுக்கு மருத்துவமனை செயல்படத் தடையும் விதித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு மருத்துவத்துறை. இது குறித்து பேசியிருக்கும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி, ``இர்ஃபான் வீடியோ விவகாரத்தில், பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனைக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிகளைத் தவிர மற்ற சிகிச்சையை 10 நாள்களுக்கு வழங்க கூடாது என உத்தவிட்டிருக்கிறோம். கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்ந்து அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற எந்த தடையும் இல்லை, அவர்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்த நிலையில், ``இர்ஃபானின் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதா, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீதெல்லாம் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கும் தமிழ்நாடு அரசு, இந்த பிரச்னைக்கு மூலக் காரணமான இர்ஃபான் மீது மட்டும் ஏன் இன்னமும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை; தி.மு.க தலைவர்களுக்கு இர்ஃபான் நெருக்கமானவர் என்பதால் தமிழக அரசு அவரை பாதுகாக்க நினைக்கிறதா?" எனப் பல்வேறு தரப்பினரும் கடுமையாக குற்றம்சாட்டி, கேள்வி எழுப்பிவருகின்றனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``இர்ஃபான் விவகாரத்தில் தவறு நிகழ்ந்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ரூ.50,000 அபராதமும், 10 நாள்கள் மருத்துவ சேவை முடக்கமும் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இர்ஃபானுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது இர்ஃபான் வெளிநாட்டில் இருக்கிறார். வெளிநாட்டிலிருந்து இங்கு வந்ததும் அவரிடமிருந்து பதில் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும், சம்பந்தப்பட்ட யூடியூபர் மீதும் டி.எம்.எஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை காவல்துறையினர் செய்வார்கள். இந்த விவகாரத்தில் கால தாமதம் எதுவும் நடக்கவில்லை. துறைசார்ந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படிருக்கிறது. அதேபோல, யூடியூபர் இர்ஃபான் மீதும் துறை ரீதியான, சட்டப்படியான இரண்டு நடவடிக்கைகளும் தொடரும்! அதிகபட்சமான நடவடிக்கை என்னவோ அதை எடுக்க இந்த அரசு வலியுறுத்தும்!" எனப் பதிலளித்திருக்கிறார்.

`திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுவது உறுதி' - அடித்துச் சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

வருகின்ற 30-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறுகின்ற முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில், நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்தை வங்கி லாக்... மேலும் பார்க்க

TVK: விஜய் உடன் இணைகிறாரா சகாயம்?! - வெளியான தகவலும் பின்னணியும்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில், வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. தனது கட்சித் தொண்டர்களுக்கு இதுவரை மூன்று கடிதங்கள் எ... மேலும் பார்க்க

புதுச்சேரி: "தவறு செய்யும் சுற்றுலாப் பயணிகளை விட்டுவிடலாமா?" – முதல்வர் கருத்தும், அமைச்சர் பதிலும்

சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்குத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை மாலை வரும் அவர்கள், ப... மேலும் பார்க்க