செய்திகள் :

TVK: "நான் எதிர்க்கட்சியா.. கேள்வி கேட்பவனா இருப்பேன்.." - விஜய்யின் அரசியல் வசனங்கள் ரீவைண்ட்

post image

தமிழ்நாட்டில் தி.மு.க-வின் வருகைக்குப் பின்னர் தமிழ்நாட்டு அரசியலும், தமிழ் சினிமாவும் இன்று வரை ஒன்றுக்கொன்று ஓட்டிப் பிணைந்திருக்கிறது. வலுவான சித்தாந்தம், மாற்றுக் கட்சியினரையும் மயங்க வைக்கும் மேடைப் பேச்சுத்திறன் கொண்ட தலைவர்கள், களத்தில் இறங்கிச் செயல்படும் தொண்டர்கள் கொண்ட தி.மு.க, தனது வளர்ச்சிக்கு சினிமாவை முக்கிய அரசியல் கருவியாகப் பயன்படுத்தியது. ஒருபக்கம் பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் களச் செயல்பாடுகள் மக்களை இழுத்தனர். மறுபக்கம் கலைஞர் கருணாநிதியின் வசனங்கள், திரையில் எம்.ஜி.ஆரின் உரிமைப் பேச்சு, கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் ஆகியோரின் பாடல் வரிகள் ஆகியவையும் தி.மு.க -வை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுசென்றன.

கலைஞர்,எம்.ஜி.ஆர்

ஒருகட்டத்தில், தி.மு.க-விலிருந்து பிரிந்து தனிக் கட்சித் தொடங்கிய எம்.ஜி.ஆரும் திரையால் மக்களிடம் தனக்கிருந்த ஆதரவை அரசியல் அதிகாரமாக மாற்றினார். அவர் காலத்திலேயும், அவருக்குப் பின்னரும் சிவாஜி, பாக்யராஜ், டி. ராஜேந்தர், விஜயகாந்த், கார்த்திக், கமல்ஹாசன் ஆகியோர் எம்.ஜி.ஆரைப் போல ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைத்து அரசியல் களத்தில் குதித்தனர். ஆனால், அவர்களில் விஜயகாந்த்தைத் தவிர வேறு எவராலும் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காரணம், இவர்களெல்லாம் திரையில் பிரபலமான பிறகு அரசியலுக்கு வந்தவர்கள்.

எம்.ஜி.ஆரோ திரையில் நடித்துக்கொண்டிருந்தபோதே அரசியலிலும் இருந்தார், அதன்பிறகே தனிக் கட்சித் தொடங்கினார். விஜயகாந்த்தும் சினிமாவில் பிரபலமாக இருக்கும்போதே தனது ரசிகர் மன்ற செயல்பாடுகள் மூலம் மக்களிடம் நெருக்கமாகி, தனிக் கட்சித் தொடங்கினார். கூடவே திரையிலும் துணிச்சலாக அரசியல் வசனங்களைப் பேசினார்.

Vijay

தற்போது அந்த வரிசையில், திரையிலிருந்து அரசியலுக்கு வரும் புதிய வரவாக நடிகர் விஜய்யும் களமிறங்கியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனிக் கட்சித் தொடங்குவதற்கு முன்பாக விஜய்யும், தன்னுடைய அரசியல் என்ட்ரியை உறுதிப்படுத்தும் வகையில் தனது திரைப்படங்களில் அரசியல் வசனங்களைப் பேசினார். அவ்வாறு தனது படங்களில் அரசு மற்றும் ஆட்சியிலிருப்பவர்களை நோக்கி விஜய் பேசிய வசனங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

சுறா:

தனது 50-வது திரைப்படத்தில் மீனவர்கள் பிரச்னையை எடுத்துரைக்கும் நாயகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் விஜய். இப்படத்தில், ஒரு காட்சியில் டீக்கடையில் விஜய், "கடலுக்கு மீன் பிடிக்கப் போன எங்க ஆளுங்கள இலங்கை மிலிட்ரிகாரங்க சுட்டுட்டாங்க. அதுல ஒருத்தர் இறந்துட்டாரு. அதனால தமிழ்நாடு பூராவும் எங்க ஆளுங்க யாரும் கடலுக்குப் போகல, ஸ்ட்ரைக். உலகத்துல யாருக்கு என்ன கஷ்டம்னாலும் அவங்களுக்காக மொதல்ல கண்ணீர் வடிக்கிறது தமிழன். இன்னைக்கு அவன் கண்ணீரைத் துடைக்க ஒரு நாதியும் இல்ல" என்று இலங்கை ராணுவத்தினரால் இந்தியாவின் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னையைப் பேசியிருப்பார்.

சுறா

இதே படத்தில் மற்றொரு காட்சியில், தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து மீனவர்களை வெளியுறுமாறு கூறும் தாசில்தார் விஜய்யைப் பார்த்து யாரென்று கேட்கும்போது, "எங்களில் ஒருத்தன், எங்களுக்காக ஒருத்தன், எங்களுக்காக உங்ககிட்ட பேசப்போற ஒருத்தன்" என அருகிலிருந்து வடிவேலு கூறுவார். அப்போது விஜய், "இந்த இடம் அரசாங்கத்துக்குச் சொந்தம்னா, இந்த மக்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமில்லையா? வந்தவங்களையெல்லாம் வாழ வைக்கிற தமிழ்நாட்டுல, சொந்த மண்ணுல பொறந்தவங்கள விரட்றீங்க. நாங்க என்ன அண்ணாநகர்ல அபார்ட்மென்டா கேட்டோம்... ஒண்ணுத்துக்கும் உதவாத உப்பு மண்ணு, இந்த மண்ணுல கூட வாழக் கூடாதுனு விரட்டியடிச்சா நாங்க எங்கதான் போவோம்" என்று அரசிடம் கேட்பார்.

சுறா

இன்னொரு காட்சியில் விஜய், ``எங்க குப்பத்தைத் தூரத்துல இருந்து பாத்தா நெறையா வீடு இருக்கிற மாதிரி தெரியும். ஆனா, பக்கத்துல போய் பாத்தாதான் தெரியும் அது வீடு இல்ல வீடு மாதிரின்னு. மழை காலத்துல மத்தவங்களுக்கு வீட்டுக்கு வெளியதான் மழை பெய்யும். ஆனா, எங்களுக்கு வீட்டுக்குள்ளயும் பெய்யும். ஆடு மாடு மாதிரி கார்ப்பரேஷன் ஸ்கூல்ல ஒண்டிக்கிட்டு, கவர்ன்மென்ட் கொடுக்குற சாப்பாட்டு பொட்டலத்துக்காக கையேந்தி நிப்போம். வெயில் காலத்துல எப்போ எரியும்னு எங்களுக்கே தெரியாது. தீபாவளி, பொங்கல் மாதிரி எங்க குப்பம் எரியுறதும் வருஷம் தவறாம நடக்கும். இதான் எங்க வாழ்க்கை" என்று மீனவர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசியிருப்பார்.

கத்தி:

விஜய்யின் திரைப் பயணத்தில் மிக முக்கியமான படம் கத்தி. இந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விஜய், விவசாயிகள் பிரச்னைகளை தனது வசனங்களால் வெளிப்படுத்தியிருப்பார். ஒரு காட்சியில் கம்யூனிசம் என்றால் என்னவென்று தனது தங்கையிடம் விளக்கும்போது, "நம்ம பசி தீர்ந்ததுக்கு அப்புறம் நாம சாப்பிட்ற இன்னொரு இட்லி அடுத்தவங்களோடது" என்று சிம்பிளாக விஜய் சொல்லியிருப்பார்.

கத்தி

அதேபோல், படத்தின் மையக்கட்சியான செய்தியாளர்கள் சந்திப்பில் விவசாயிகளின் பிரச்னைகளைப் பேசும் விஜய், "தாமிரபரணி ஆத்துலருந்து ஒரு கோலா கம்பெனி ஒரு நாளைக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணி எடுக்குது. இதுல விவசாயத்துக்கு எங்க தண்ணி இருக்கும். அவங்க பசிக்குப் பிச்சை கேக்கல, விவசாயத்துக்குத் தண்ணி கேக்குறாங்க. இந்தியா முழுக்க ஒவ்வொரு 30 நிமிஷத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை பண்ணிக்குறான். ஐயாயிரம் கோடி கடன் வாங்குன ஒரு பீர் பேக்டரி ஓனர் கடனை கட்ட முடியாதுனு கை தூக்கிடுறான், அவன் தற்கொலை பண்ணிக்கல, அவனுக்கு லோன் கொடுத்த அதிகாரிகள் தற்கொலை பண்ணிக்கல.

கத்தி

ஆனா, ஐயாயிரம் ரூபா கடன் வாங்குன ஒரு விவசாயி கடனை கட்ட முடியாம வட்டி மேல வட்டி ஏறி கடைசில பூச்சி மருந்து குடிச்சு தற்கொலை பண்ணிக்குறான். பணக்காரன் யூஸ் பண்ற காண்டம்ல ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர் வேணும்னா, ஒரு ஏழை குழந்தை தன்னோட வாழ்க்கைல ஸ்ட்ராபெர்ரிய நெனச்சி பாக்க முடியுமா...? 2ஜி அலைக்கற்றை, வெறும் காத்த வச்சு மட்டும் கோடி கோடியா ஊழல் பண்ற ஊர் இது" என்று அரசியல்வாதிகளையும் சேர்த்து விமர்சித்திருப்பார்.

மெர்சல்:

மெர்சல் படத்தில் மூன்று வேடங்களில் வந்து மருத்துவத்துறையில் இருக்கும் பிரச்னைகளைப் பேசியிருப்பார். இதில், ஃபிளாஷ்பேக்கில் வரும் விஜய் ஒரு காட்சியில், "ஒரு பட்டதாரி உருவாக மூணு வருஷம். ஒரு டாக்டரோ, இன்ஜினியரோ உருவாக நாலஞ்சு வருஷம். ஆனா, ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படுது. ஒரு தலைமுறைக்கு ஒரு தலைவன்தான் கிடைக்குறான். தலைவன்றது வெறும் வார்த்தை இல்ல, ஒரு தலைமுறையோட மொத்த நம்பிக்கை" என்று நேரடியாகவே அரசியல் பேசியிருப்பார்.

மெர்சல்

மேலும், ஃபிளாஷ்பேக் காட்சிகள் முழுக்கவே கோயிலை விட ஆஸ்பத்திரி முக்கியம், இலவச மருத்துவம் வேண்டும் என்று விஜய் வசனங்கள் பேசியிருப்பார். முக்கியமாக, படத்தின் இறுதிக் காட்சியில் விஜய், "எல்லா துறையிலும் தப்பு நடக்குது. ஆனா, மருத்துவத்துல நடக்றது தப்பு இல்ல, நம்பிக்கைத் துரோகம். மெடிக்கல் சிஷ்டம் பிஸ்னஸ்-ஆ மாறுனதுக்கு, அரசு மருத்துவமனைகள் ஒழுங்கா நடக்காததுக்கு யாரெல்லாம் காரணமோ அவங்கெல்லாம்தான்.

மெர்சல்

ஏழு சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற சிங்கப்பூர், தன் மக்களுக்கு மருத்துவத்தை இலவசமா தரும்போது, 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமா தர முடியல? மருந்துக்கு 12 சதவிகிதம், ஆனா தாய்மார்கள் தாலியறுக்குற சாராயத்துக்கு ஜி.எஸ்.டி கிடையாதாம். இன்குபேட்டர்-ல வச்சிருந்த குழந்தை பெருச்சாளி கடிச்சு இறந்துபோறதுலாம் நம்ம ஊர்ல மட்டும்தான் நடக்கும். ஜனங்க கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ஸ் பாத்து பயப்படுறாங்க. அந்த பயம்தான் பிரைவேட் ஹாஸ்பிடல்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்" என்று நேரடியாகவே அரசையும், ஆட்சியாளர்களையும் நோக்கி கேள்விகேட்டிருப்பார்.

மேற்குறிப்பிட்ட மூன்று திரைப்படங்களைக் காட்டிலும் இந்தத் திரைப்படத்தில், படத் தலைப்பின் மூலமாகவே இதுவொரு அரசியல் திரைப்படம் என்பதையும், தான் அரசியல்தான் பேசப்போகிறேன் என்பதையும் விஜய் சொல்லியிருப்பார். படத்தில் ராதாரவியுடன் பேசும் ஒரு காட்சியில் விஜய், "எதிர்க்க ஆளே இல்லன்ற எண்ணம்தான் ஜனநாயகத்தின் முதல் ஆபத்து. ட்ரெயின்ல இருந்து தூக்கியெரிஞ்சப்போ காந்திகூட ஒத்த ஆளுதான். ஒத்த ஆளு கூட்டமா மாறுறதும், கூட்டம் ஒத்த ஆளா மாறுறதும் இப்போலாம் ஒரேநாள்ல மாறும்" என்று பேசியிருப்பார்.

சர்கார்

இன்னொரு காட்சியில், அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் பேசுகையில் தன்னைப் பற்றி விவரிக்கும் விஜய், "அரசியல்வாதிகளுக்கு ஐந்து வருஷம் பவர் இருக்கு. ஆனா, பொதுமக்களுக்கு ஒரேயொரு நாள்தான் பவர். எப்போ நாம கேள்வி கேட்ருக்கோம்... கேள்வி கேக்காம பதில் எப்படி கிடைக்கும்" என்று பேசியிருப்பார்.

மேலும், படத்தில் இறுதியாக வரும் சண்டைக் காட்சியில், ``நம்மள மனுஷனா பாக்கல, அவன் காசு கொடுத்து வாங்குன ஒட்டா பாக்குறான். 100 சதவிகித மக்களை யார் ஆளணும்னு 20 சதவிகித மக்கள்தான் முடிவு பன்றாங்க. இதுதான் ஜனநாயகமா? ஒரு குடிமகனோட குறைந்தபட்ச தேசப்பற்றே ஓட்டு போட்றதுதான். அரைமணிநேரம் வரிசைல நின்னு நாட்டுக்காக ஒட்டு போட முடியலனா நீதான் முதல் குற்றவாளி" என்ற வசனங்களால் ஓட்டுப் போடுவதன் முக்கியத்துவதைப் பேசியிருப்பார்.

சர்கார்

இறுதியில், தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, "எதிர்க்க ஆளே இல்லன்ற எண்ணம்தான் ஜநாயகத்தின் முதல் ஆபத்து" என்ற வசனத்தைப் மீண்டும் பேசும் விஜய், "நான் எதிர்வரிசையில் இருப்பேன். எதிர்க்கட்சியாக... கேள்வி கேட்பவனாக..." என்று கூறி முன்னாள் கலெக்டரை முதல்வராக முன்மொழிவதாகக் கூறுவார். இதுபோல இன்னும் பல படங்களிலும் பன்ச் லைனாக விஜய் அரசியல் பேசியிருக்கிறார்.

TVK| Vijay

இவ்வாறு, திரைப்படங்களில் நடிகராக வசனங்கள் பேசியிருக்கும் விஜய், அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக என்ன பேசப்போகிறார், எப்படிச் செயல்படப்போகிறார் என்பதை அவரின் முதல் மாநாட்டுக்குப் பின்னர் பொறுத்திருந்து பாப்போம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Tvk Vijay : `மது அருந்தினால் நோ என்ட்ரி, மெக்கானிக் குழு, நெரிசல் தவிர்க்க திட்டம்'- மாநாடு ஹைலைட்ஸ்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் அரசியல் மாநாடு நாளை நடைபெறவிருக்கும் நிலையில், அதற்காக மாபெரும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறவிருக்கும் திடலுக்கு சென்றோம... மேலும் பார்க்க

TVK Vijay: மாநாடு வரை ஒவ்வொரு கி.மீ-க்கும் ஒரு மரம்... பசுமை மாநாடா - சென்னை டு வி.சாலை Live Report!

நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு வி.சாலையில் நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். மேலும் பார்க்க

TVK Vijay: நடிகர் விஜய்யின் அரசியல் மாநாடு; - S.A.C பூர்வீக ஊர் மக்கள் ஷேரிங்ஸ்

அரசியல் களத்துக்குள் விஜய் வரப்போகிறார் என்ற தகவல்கள் பேசப்பட்டபோதே பல்வேறு விவாதங்கள் தொடங்கியது. தொடர்ந்து, அரசியல் தொடர்பான படங்களில் நடித்தும், அவ்வப்போது சினிமா மேடைகளில் அரசியல் பேசியும் தன்னுடை... மேலும் பார்க்க

TVK: 'பிஸ்கட், ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில்..' - மாநாட்டிற்குத் தயாராகும் 8.5 லட்சம் சிற்றுண்டி கிட்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெறவிருக்கிறது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள வி. சாலையில் நடக்கும் இந்த பிரமாண்டமான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பணிகள... மேலும் பார்க்க