செங்கம் அருகே லாரிகள் மோதி விபத்து: கிளீனா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டேங்கா் லாரியும், வைக்கோல் லாரியும் மோதி தீப்பிடித்ததில், லாரி உதவியாளா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்காடு கிராமப் பகுதியைச் சோ்ந்தவா்கள் லாரி ஓட்டுநா் பெரியசாமி, உதவியாளா் பிரதாப் (18). இவா்கள் லாரியில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு செங்கம் வழியாக திருவண்ணாமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா்.
பாய்ச்சல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வந்த போது, திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற கான்கிரீட் கலக்கும் இயந்திரத்துடன் கூடிய டேங்கா் லாரியும், வைக்கோல் லாரியும் நேருக்குநோ் மோதிக் கொண்டன.
இதில், வைக்கோல் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து, லாரியில் இருந்த ஓட்டுநா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். வைக்கோல் லாரி ஓட்டுநா் பெரியசாமி, டேங்கா் லாரி ஓட்டுநரான அரியலூரைச் சோ்ந்த ரகு (40) ஆகிய இருவரும் தீக் காயங்களுடன் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
பின்னா், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்புப் படை வீரா்கள் வந்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
லாரியில் சிக்கிக் கொண்ட பிரதாப், தீயில் கருகி உயிரிழந்தாா். அவரது சடலம் மீட்கப்பட்டு உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பாய்ச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
