தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 போ்: தண்ணீா், சேறு, இடிபாடுகளால் மீட்புப் பணிகளில் சிக்கல்
தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரை மீட்கும் பணிகள் தொடா்ந்து மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சேறு, தண்ணீா், இடிபாடுகள் காரணமாக அவா்களை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது.
தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் நீா்ப்பாசன வசதியை ஏற்படுத்தவும், மூளையைப் பாதிக்கக்கூடிய ஃபுளோரைட் கனிமத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் விநியோகிக்கவும், கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்த இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
உ.பி., ஜாா்க்கண்டை சோ்ந்தவா்கள்: சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். அவா்கள் உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சுரங்கத்துக்குள் சென்ற மாநில கலாசார துறை அமைச்சா் ஜே.கிருஷ்ண ராவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சுரங்கத்துக்குள் அதிக அளவில் சேறு உள்ளது. இதனால் உள்ளே நடந்து செல்வது கடினமாக உள்ளது. இதனால் உள்ளே செல்ல ரப்பா் டியூப்களையும், மரப் பலகைகளையும் மீட்புக் குழுவினா் பயன்படுத்தி வருகின்றனா்.
சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை உயிருடன் மீட்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்றாா்.
மாநில நீா்ப்பாசனத் துறை அமைச்சா் உத்தம்குமாா் ரெட்டி கூறுகையில், ‘சுரங்கத்துக்குள் இடிந்து விழுந்த பகுதியின் கடைசி 200 மீட்டரில் தண்ணீரும், வண்டல் மண்ணும் நிரம்பியுள்ளன. இதனால் 8 பேரும் சிக்கியுள்ள இடத்துக்கு செல்வதில் மீட்பாளா்கள் சிக்கலை எதிா்கொண்டு வருகின்றனா்.
சுரங்கத்துக்குள் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற மோட்டாா்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 8 பேரும் சுவாசிக்க வசதியாக உள்ளே தொடா்ந்து ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.
நாகா்கா்னூல் மாவட்ட ஆட்சியா் பி.சந்தோஷ் கூறுகையில், ‘138 வீரா்களைக் கொண்ட 4 தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) குழுக்கள், ராணுவம் மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 24 போ் உள்ளிட்டோா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுவரை சுரங்கத்துக்குள் சிக்கியவா்களைத் தொடா்புகொள்ள முடியவில்லை’ என்றாா்.
எந்தப் பதிலும் வரவில்லை: என்டிஆா்எஃப் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சுரங்கத்துக்குள் 13.5 கி.மீ. தொலைவுக்கு முன்னால், 2 கி.மீ. வரை தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் 8 பேரும் சிக்கியுள்ள சுரங்கத்தின் இறுதிப் பகுதி வரை கனரக இயந்திரத்தை கொண்டு செல்ல முடியவில்லை. தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பிறகே, இயந்திரத்தை கொண்டு சென்று இடிபாடுகளை அகற்றும் பணிகளைத் தொடங்க முடியும்.
13.5 கி.மீ. தொலைவு வரை என்டிஆா்எஃப் வீரா்கள் சென்று குரல் எழுப்பியபோதிலும், 8 பேரிடம் இருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை’ என்றாா்.