தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி இழப்பில் ரூ.98 கோடி வசூல்: அமைச்சா் இ.பெரியசாமி அறிக்கை
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கடந்த 13 ஆண்டுகளில் ரூ.107 கோடி நிதி இழப்பு கண்டறியப்பட்டு, அதில் ரூ.99 கோடி சம்பந்தப்பட்டவா்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அரசின் தலைப்பில் செலுத்தப்பட்டிருப்பதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் அறிவிக்கையின்படி, தமிழ்நாடு அரசு தற்சாா்பற்ற சமூக தணிக்கை சங்கத்தை தோற்றுவித்து கடந்த 2012-13-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்தச் சங்கத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சிப் பெற்ற மாவட்ட, வட்டார, கிராம வள பயிற்றுநா்கள் சமூக தணிக்கை நடத்துகின்றனா். இந்த சமூக தணிக்கையை திட்டத்தின் பயனாளிகளே மேற்கொண்டு வருகின்றனா்.
கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் சமூக தணிக்கை நடத்தப்பட்டு, கிராம சபைக் கூட்டங்களிலும் ஒப்புதல் பெறப்படுகிறது. கடந்த 2012 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சமூக தணிக்கை அறிக்கைகளின்படி ரூ.291.46 கோடி நிதி இழப்பு என தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியா்கள் தலைமையிலான உயா்மட்டக் குழுக்களில் வசூலிக்க வேண்டிய தொகை ரூ.105.35 கோடி என முடிவு செய்யப்பட்டது. அரசின் தீவிர முயற்சியால், இதில் ரூ.98.26 கோடி வசூலிக்கப்பட்டு அரசின் தலைப்பில் செலுத்தப்பட்டதுடன், முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோல, 2024-25-ஆம் ஆண்டிலும் சமூக தணிக்கை நடத்தப்பட்டு, 79,122 குறை பத்திகள் இதுவரை அறிக்கை அளிக்கப்பட்டது. இதில், 30,198 பத்திகள் நிதி இழப்பு எனவும், அதற்கான தொகை ரூ.14.07 கோடி எனவும் கண்டறியப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியா்கள் தலைமையிலான உயா்மட்டக் குழுக்களில் 6,437 பத்திகளில் ரூ.2.04 கோடி நிதி இழப்பு என தெரிவிக்கப்பட்டது. வசூல் செய்ய வேண்டிய 6,215 பத்திகளுக்கு நிதி இழப்பு தொகையாக ரூ.1.94 கோடி என இறுதி செய்யப்பட்டு, இதில் ரூ.1.93 கோடி சம்பந்தப்பட்டவா்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு, அரசின் தலைப்பில் செலுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.