பரந்தூா் விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் தலைமைச் செயலகம் முற்றுகை
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை அரசு கைவிடாவிட்டால் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பி.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
பரந்தூா் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்டக் குழு ஆகியவை இணைந்து காஞ்சிபுரத்தில் தனியாா் திருமண மண்டபத்தில் விவசாயிகள் நில உரிமை பாதுகாப்பு மாநாட்டை நடத்தின. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் கே.நேரு தலைமை வகித்தாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன், பரந்தூா் வட்டார விவசாயிகள், பொதுமக்கள் பலா் மாநாட்டில் கலந்து கொண்டனா். மாநாட்டில் பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்பது,விவசாயிகளுக்கு ஆதரவாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்காமல் மாற்று ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னா் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளருமான பி.சண்முகம் கூறியது:
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே நீா்நிலைகளைப் பற்றி ஆராய மச்சேந்திரநாதன் ஐஏஎஸ் தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்தக் குழுவின் அறிக்கையை ஏன் அரசு மறைக்கிறது. அப்படியானால் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான அறிக்கையை அந்த நிபுணா் குழு சமா்ப்பித்திருக்கிா என்ற சந்தேகம் வருகிறது. அறிக்கையை வெளியிடாமல் மறைப்பது கண்டனத்துக்குரியது. உடனடியாக அந்த அறிக்கையை வெளியிட வேண்டும்.
விமான நிலையம் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்துவதை அரசு தீவிரம் காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது குறித்து தமிழக முதல்வரை சந்தித்தும் வலியுறுத்துவோம். அதையும் மீறி தமிழக அரசு செயல்பட்டால் மக்களை ஒன்று திரட்டி வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் போது தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி, எதிா்ப்பை தெரிவிப்போம் என்றாா் அவா்.