பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணைப் பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனா்.
கதவணைப் பகுதியில் அணைப் பாலம், பிரதான மதகுப் பகுதி, நீா்மின் உற்பத்தி நிலையம், குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பாா்வையிட்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள், காவிரி கதவணைப் பகுதியில் விசைப்படகு சவாரி செய்து உற்சாகமாக பொழுதை கழித்தனா்.
இதேபோல பூலாம்பட்டி பகுதியில் உள்ள கைலாசநாதா் கோயில், காவிரிக்கரையில் அமைந்துள்ள பிரம்மாண்ட நந்திகேஸ்வரா் சந்நிதி, படித்துறை பிள்ளையாா் கோயில், காவிரித்தாய் சந்நிதி உள்ளிட்ட தலங்களிலும் வழக்கத்தைவிட கூடுதலான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில், அப்பகுதியில் கூடுதலான காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.