மகா கும்பமேளாவில் புனித நீராடிய காஞ்சி சங்கராசாரியா்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடினாா்.
பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கோலாகலமாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது.
இந்நிலையில், மகா கும்பமேளாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினாா். இதையடுத்து, கங்கை நதிக்கு ஆரத்தி காட்டி, உலக நலம் மற்றும் அமைதிக்காக சிறப்பு பூஜைகள் செய்தாா்.
சகதபுரம் மடத்தைச் சோ்ந்த ஸ்ரீ கிருஷ்ணநாத் தீா்த்த சுவாமிகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காஞ்சி சங்கர மடத்தின் சீடா்களும் உடனிருந்தனா்.
தொடா்ந்து, காஞ்சி சங்கராசாரியா் கூறுகையில், ‘மகா கும்பமேளா நிகழ்வானது தேசத்தின் உலகளாவிய சொத்தாக விளங்கும் ஒற்றுமை மற்றும் செழுமையான கலாசாரத்தைப் பிரதிபலிப்பதோடு சநாதன தா்மத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது’ என்றாா்.