செய்திகள் :

மரணத்தின் தோழன் - மர்மங்களை உள்ளடக்கிய எர்னஸ்ட் ஹெமிங்வேவின் வாழ்க்கை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்

1961 ஆம் ஆண்டு. ஜூலை மாதம் இரண்டாம் நாள். அன்று வழக்கத்திற்கு மாறாக, விடியும் முன்பே விழித்துக் கொண்டார் எர்னஸ்ட் ஹெமிங்வே. 

மனைவி மேரியை ஒருமுறை பரிவுடன் பார்த்துவிட்டு, வீட்டின் அடித்தளத்தை நோக்கி சோர்வுடன் நடந்துச் சென்றார். அங்கு தான், வேட்டையாடுவதற்காக அவர் பயன்படுத்தும் பல்வேறு வகையான துப்பாக்கிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அவருக்கு மிகவும் பிடித்தமான கைத்துப்பாக்கி ஒன்று, முதல் வரிசையில் அவரின் வருகைக்காகக் காத்திருந்தது. நேராக அதனருகில் சென்ற அவர், இறுதியாக ஒருமுறை அதனை அழுத்தமாக தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

1905 இல் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் குடும்பம்

இதுநாள் வரை பறவைகளையும் விலங்குகளையும் மட்டுமே குறி பார்த்த அது, முதன் முறையாக அன்று முதலாளியின் தலையையே குறி பார்த்தது. 

சிறிது நேரத்தில் அங்கே கேட்ட பெருஞ்சத்தம், அந்தக் காலைப் பொழுதின் அமைதியை முற்றிலுமாக உருக்குலையச் செய்தது. முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த மேரி, சத்தம் கேட்டு அவசர அவசரமாக கீழே வந்து பார்த்தபோது, மூளைச் சிதறி அங்கே பிணமாகக் கிடந்தார் உலகின் ஆகச் சிறந்த எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே.

ஆம்! தந்தை கிளாரன்ஸ் ( Clarence Hemingway ) போலவே, தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார் ஹெமிங்வே!

நோபல் பரிசு பெற்ற, உலகின் முக்கிய எழுத்தாளராக புகழின் உச்சியில் இருந்த எர்னஸ்ட் ஹெமிங்வே, தற்கொலை செய்து கொண்டது ஏன்? அவருக்கிருந்த உளவியல் சார்ந்த பிரச்னைகள் என்னென்ன? 

இவை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள, ஹெமிங்வேயின் பால்ய காலத்திலிருந்து ஆரம்பிப்பது தான் சரி.

ஹெமிங்வேயின் பால்ய காலம்

மூளை மடிப்புகளைப் போலவே ஹெமிங்வேயின் ஆரம்ப கால வாழ்க்கை, பல சிக்கல்களைக் கொண்டது. அதற்குக் காரணம், அவருடைய பெற்றோர்கள் என்றால் நம்ப முடிகிறதா? 

எர்னஸ்ட் மில்லர் ஹெமிங்வே ( Ernest Miller Hemingway ) 1899 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் இலினோய் மாகாணத்தில், ஜூலை 21 அன்று பிறந்தார். அவருடைய தந்தை - கிளாரன்ஸ், தாய் - கிரேஸ் ( Grace Hemingway ). 

கிளாரன்ஸ் ஒரு மருத்துவர். மிகவும் கண்டிப்பு மிக்க ஒரு தந்தையாகவே அவர் ஹெமிங்வேயிடம் இருந்திருக்கிறார். சிறு தவறு செய்தால் கூட அடி விழும். பொறுமை, கருணை, இரக்கம் போன்ற வார்த்தைகளுக்கு கிளாரன்ஸின் அகராதியில் இடமில்லை. அதனால், தந்தை கிளாரன்ஸைக் கண்டாலே அஞ்சி நடுங்குவார் ஹெமிங்வே. தந்தை மீதிருந்த பயம், போகப் போக வெறுப்பாக மாறியது. 

ஹெமிங்வேயின் பெற்றோர்

ஹெமிங்வேயின் உளவியலை ஆராய்ந்த மனநல மருத்துவர் ஒருவர், 'ஹெமிங்வேவிற்கு தன்னுடைய தந்தையை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே இருந்திருக்கிறது' என்கிறார்!

கிளாரன்ஸுக்கு மன அழுத்த நோய் இருந்திருக்கிறது. 1928 ஆம் ஆண்டு அது தீவிரமடைய, தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து போனார் அவர். 

தந்தையின் தற்கொலை, ஹெமிங்வேயை நிறையவே பாதித்திருக்கிறது. சிறுவயதில் தனக்கு இருந்த தந்தையின் மீதான வெறுப்பு, அவர் தற்கொலை செய்து கொண்ட பிறகு குற்றவுணர்ச்சியாக உருமாறியிருக்கிறது. 

'தந்தையின் தற்கொலைக்குக் காரணம் நீ தான்...' என தன்னுடையத் தாயான கிரேஸை வெளிப்படையாகவே பழித்தார் ஹெமிங்வே. இது ஒருவகையில், அவர் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு பாதுகாப்புக் கவசமே ( Defence Mechanism).

தாயை வெறுத்த ஹெமிங்வே

புகழ்பெற்ற அவருடைய சிறுகதைகள் பலவற்றில், தற்கொலை செய்து கொள்ளும் தந்தை கதாபாத்திரம் ஒன்று நிச்சயம் இடம்பெறும். அவருடைய முக்கியமான நாவலான 'From Whom the Bell Tolls' ல் கூட, ராபர்ட்டின் தந்தை தற்கொலை செய்து கொள்வார்.

தாய் கிரேஸுடனும் அவருக்கு, எப்போதும் இணக்கம் இருந்ததில்லை. ஹெமிங்வேயின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமாகிய ஜான் டோஸ் பாஸ்சோஸ் ( John Doss Passos ), ஹெமிங்வேக்கும் அவர் தாய்க்கும் இருந்த உறவை இப்படிச் சொல்லியிருக்கிறார்.

'தன்னுடைய தாயை உண்மையில் வெறுத்த, நான் அறிந்த ஒரே மனிதன் என்றால் அது ஹெமிங்வே மட்டும் தான்'

தந்தை கண்டிப்பானவர், அதனால் பிடிக்கவில்லை சரி. தாயை ஏன் அவர் வெறுக்க வேண்டும்? அதற்குப் பல காரணங்களை முன் வைக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

கிரேஸ் எப்போதும் ஹெமிங்வேயைச் சுதந்திரமாக விட்டது இல்லை. இயல்பிலேயே ஆதிக்கக் குணம் கொண்டவர் கிரேஸ். அவர் சொல்வதைத் தான் எல்லோரும் கேட்க வேண்டும்.

ஹெமிங்வே

பெற்றோர்கள் முலம் சந்தித்த நெருக்கடிகள்...

அக்காலத்தில் விக்டோரியா நாட்டின் வழக்கப்படி, ஆண் சிறுவர்களுக்கு பெண்களைப் போல உடையணிவது வழக்கம். ஹெமிங்வே அதை வெறுத்தார். ஆனால்‌ கிரேஸ், ஹெமிங்வேக்குக் கட்டாயப்படுத்தி அப்படிப்பட்ட ஆடைகளை அணிவித்தார். அவர் அணிவித்த ஆடைகளோ‌ மிகுந்த பெண்மைதன்மைக் கொண்டதாக வேறு இருந்தன.

இதுபற்றி தாயிடம் சொன்னால் அடுத்து என்ன நடக்கும் என்பது ஹெமிங்வேக்கு நன்கு தெரியும். எனவே எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக் கொண்டு அமைதியாகி விடுவார். ஹெமிங்வே தன்னுடைய தாயை வெறுக்கப் பல காரணங்களுள் ஒன்றே ஒன்று‌தான் இது.

ஐந்து வயது முதல், பதின்ம வயது தொடக்கம் வரையிலான காலகட்டம் தான் பிள்ளைகளின் மனவளர்ச்சிக்கு முக்கியமான காலகட்டம். அப்போது தான் அவர்களுடைய குணாதிசயங்கள் ஒருநிலை படும். இந்த நேரத்தில் தான், ஏகப்பட்ட உளவியல் சார்ந்த குழப்பங்கள் அவர்களுக்குள் உண்டாகும். அதைத் தீர்க்க வேண்டிய கடமை, பெற்றொர்களிடம் தான் உள்ளது.

ஆனால், ஹெமிங்வேக்கு இந்த காலகட்டம் தான் பிரச்னையாகவே அமைந்தது. பெற்றோர்கள் முலம் அவர் சந்தித்த நெருக்கடிகள் எல்லாமே, பின்னாளில் அவருக்கு ஏற்பட்ட மனநோய்களுக்குக் காரணமாக அமைந்தன.

எனில், சிறுவயதில் தான் எதிர்கொண்ட உளவியல் சார்ந்த சிக்கல்கள் தான் ஹெமிங்வேயைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதா?

அதுவும் ஒரு காரணமேத் தவிர, அதுதான் காரணம் என்றில்லை.

ஹெமிங்வேயின் குடும்பத்தில் 5 தற்கொலைகள்!

ஹெமிங்வேயின் தந்தை, மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை முன்பே பார்த்தோம் அல்லவா? அவர் மட்டுமல்ல. ஹெமிங்வேயின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்! ( ஹெமிங்வே மற்றும் அவருடைய தந்தை கிளாரன்ஸ் உள்பட)

மற்ற மூன்று பேருடைய விவரங்கள்:

1. லெய்செஸ்டர் ( Leicester Hemingway ) : 

ஹெமிங்வேயின் இளைய சகோதரர். இவரும் ஒரு எழுத்தாளரே. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 67 வயதில் துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு இறந்து போனார்!

2. உர்சுலா ( Ursula Hemingway ) : 

ஹெமிங்வேயின் சகோதரிகளுள் ஒருவர்‌. புற்றுநோயாளியான இவர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, தன்னுடைய 64 வயதில் அதிக அளவிலான மாத்திரைகளை சாப்பிட்டு இறந்து போனார். 

3. மார்காக்ஸ் ( Margaux Hemingway ) : 

ஹெமிங்வேயின் பேத்தி. இவர் ஒரு நடிகை. தன்னுடைய 42 வயதில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் - மன அழுத்தம். தேர்வு செய்த வழி - அதிக அளவிலான மாத்திரைகளை உட்கொண்டது.

இப்படி ஹெமிங்வேயின் குடும்ப ஜீன்களிலேயே, வாடகைக்கு குடியிருந்திருக்கிறது 'தற்கொலை'.  ஆக, ஹெமிங்வேயின் தற்கொலைக்கு மரபியல் சார்ந்த விஷயங்களும் முக்கியக் காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது.

சரி, ஹெமிங்வேக்கு இருந்த மனநோய்களைப் பற்றிப் பார்ப்போம்.

மனநோயால் பாதிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மார்ட்டின் ( Christopher Martin ) எனும் மனநல மருத்துவர்,

'Ernest Hemingway: A Psychological Autopsy of a Suicide' என்ற தலைப்பில் நீண்ட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில், ஹெமிங்வேக்கு இருந்த மனநோய்கள் பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

ஹெமிங்வே, 'Bipolar Disorder' எனப்படும் இரு துருவ நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்நோய் உள்ளவர்கள், சில சமயம் மன எழுச்சியாலும் சில சமயம் மனச் சோர்வாலும் பாதிக்கப்படுவர்.

எழுச்சியின் போது எல்லா விஷயங்களையும் அதி வேகமாக அவர்களால் செய்ய முடியும். உலகம் வண்ணமயமாகத் தெரியும். எந்நேரமும் அதீத ஆற்றலுடன், சோர்வே அடையாமல் வேலை செய்வர். தூக்கத்தைத் தூக்கி, தூர வைத்துவிடுவர். இதற்கு அப்படியே நேர் எதிரானது மனச் சோர்வடைவது.

ஹெமிங்வே இரண்டு வகையாலும் பலமுறை பாதிக்கப்பட்டிருக்கிறார்.

மன எழுச்சியின் போது, நேரம் காலம் பார்க்காமல் எழுதித் தள்ளியிருக்கிறார். ஹெமிங்வேயின் முதல் நாவலான 'The Sun Also Rises', அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் எழுதியது தான். 1924 ல் மட்டும், ஏழு சிறுகதைகளை அடுத்தடுத்து எழுதியிருக்கிறார் ஹெமிங்வே.

ஆனால், மனச் சோர்வின் போது அவரால் அப்படி இயங்க முடியவில்லை. தற்கொலை எண்ணங்கள் மட்டுமே மேலோங்கி நின்றன.

'நான் மாபெரும் ரத்தம் தோய்ந்த வெறுமையையும், ஒன்றுமில்லாததையும் உணர்கிறேன். எப்பொழுதும் இனி என்னால் எழுத முடியாது, சண்டையிட முடியாது, சாப்பிட முடியாது. இது என் மரணத்திற்கான ஆரம்பம்'

மனச் சோர்வில் இருந்தபோது தன்னுடைய நண்பர் பாஸ்சோஸிடம், ஹெமிங்வே சொன்ன வார்த்தைகள் இவை.

இவருடைய மனநோய் பற்றி நன்கு அறிந்த நண்பர்கள்,'அவர் சில நேரம் நன்றாகப் பேசுவார். சில நேரம் கோபமாகப் பேசுவார். சில நேரங்களில் பேசுவதே இல்லை. திடீரென சிரிப்பார். பிறகு வெடித்து அழுவார். அவருக்கிருந்த மனநோய் அவரைப் பாடாய் படுத்தியது' என்கின்றனர்.

இதனாலேயே ஹெமிங்வேயால், யாருடனும் நீண்ட நாட்களுக்கு நட்பு பாராட்ட முடிந்ததில்லை. திருமண வாழ்க்கையில் அடுத்தடுத்து தோல்வியுற்றார் அவர். மேரி, அவருடைய நான்காவது மனைவி.

மேலும், ஹெமிங்வேக்கு புகழ்பெற்ற எல்லா எழுத்தாளர்கள் போலவே மிதமிஞ்சிய குடிப்பழக்கமும் இருந்தது. இது அவருக்கிருந்த மனநலப் பிரச்னையை இன்னும் தீவிரப்படுத்தியது.

குடியால் அவருடைய கல்லீரல் வீக்கம் கண்டது. குடி மயக்கத்தில், அடிக்கடி கீழே விழுந்து மண்டையை உடைத்துக் கொண்டார் ஹெமிங்வே.

மேலும் ஹெமிங்வேவுக்கு எத்தனை முறை விபத்துகள் நடந்திருக்கின்றன என்பது பற்றி, ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவுக்கு மரணத்துடன் கபடி விளையாடியிருக்கிறார் அவர். மனைவியுடனான ஆப்பிரிக்க பயணத்தின்போது அவர் சென்ற விமானம் விபத்தில் சிக்கி, மரணத்திற்கு மிக அருகில் சென்று திரும்பி வந்தது, அப்போதைய பத்திரிகைகளில் முதல் பக்க செய்தியாக வெளியானது.

காளைச் சண்டையிலும், வேட்டையாடுவதிலும் ஈடுபாடு கொண்ட ஹெமிங்வே, உடல் முழுக்கப் பல வீரத் தழும்புகளைப் பரிசாக வாங்கியுள்ளார். முக்கியமாக தலைப்பகுதியில்! (ஹெமிங்வேயின் நெற்றியில் மினி இட்லி ஸைசில் இருக்கும் தழும்பைத் தேடிப் பார்க்கவும் ).

இப்படி மாதத்திற்கு ஒருமுறை தவணை முறையில் தலையில் அடிபட்டதால், அவருடைய நினைவாற்றலில் சிக்கல் முளைத்தது. கவனம் சிதறியது. இதனால் எழுதுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார் ஹெமிங்வே. 

தற்கொலை செய்து கொள்வதற்கு சில மாதங்கள் முன்பு தான், அமெரிக்காவின் புகழ்பெற்ற மயோ க்ளினிக் ( Mayo Clinic ) மருத்துவமனையில் மன அழுத்தத்திற்கான சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஹெமிங்வே. ஆனால் எவ்வளவு நாள்கள் தான் மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்?

தற்கொலை ஒரு நிழலைப் போல, வாழ்நாள் முழுவதும் ஹெமிங்வேயைப் பின்தொடர்ந்திருக்கிறது. காலம் முழுக்க அவருடன் பகடி ஆடிய அது, இறுதியாக அன்றைய விடியற்காலைப் பொழுதில் அவரை வென்றுவிட்டது.

சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட உளவியல் சார்ந்த சிக்கல்கள், குடும்பத்தில் பிணைந்திருந்த தற்கொலைகள், மனநோய், குடிப்பழக்கம், தலையில் பலமுறை அடிபட்டது என இவையெல்லாம் சேர்ந்தே ஹெமிங்வேயின் உயிரை குடித்திருக்கிறது.

இறுதி வரையில் ஹெமிங்வேயின் மனைவி மேரி, 'ஹெமிங்வே தற்கொலை செய்து கொள்ளவில்லை. துப்பாக்கியை சுத்தம் செய்தபோது நடந்த விபத்தில் தான் இறந்தார்' என்றே நம்பி வந்தார். ஆனால் ஹெமிங்வேயின் உளவியலை ஆராய்ந்தால், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான சாத்தியக்கூறுகள் தான் நிறைய இருக்கின்றன.

'கடலும் கிழவனும்' ( The Old Man and The Sea ) போன்ற மென்மையான நாவலை உருவாக்கிய ஹெமிங்வேயின் வாழ்க்கை, கடலைப் போலவே பல மர்மங்களை உள்ளடக்கியது. 

ஹெமிங்வேயின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மைக்கேல் ரெனால்ட்ஸ், 'ஹெமிங்வே ஒரு ஆழமான கிணறு போன்றவர். அதில் குதித்துவிட்டால் மேலே ஏறி வருவது சிரமம்' என்கிறார். 

உண்மைதான்...

ஹெமிங்வேயைப் புரிந்து கொள்வது சிரமம்.

-சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.