மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
உங்கள் குழந்தையின் ஐ.க்யூ வை அதிகரிக்க முடியுமா? விளக்குகிறார் குழந்தை மனநல மருத்துவர்!
ஐ.க்யூ டெஸ்ட் எதற்காக எடுக்கிறோம்; நம் குழந்தைகளின் ஐக்.யூவை அதிகரிக்க முடியுமா; ஐ.க்யூ அதிகமாக இருந்தால் நம் குழந்தைகள் திறமை வாய்ந்தவர்களா..?
இந்த சந்தேகங்கள் பல பெற்றோர்களுக்கும் இருக்கும். இதுபோன்ற கேள்விகள் அனைத்திற்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த குழந்தை மனநல மருத்துவர், ஜனனி எஸ். பிரசன்னா விளக்கம் அளிக்கிறார்.

"ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் பொதுவாக எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர்களின் வார்த்தைகள் மூலமும் நடத்தையின் மூலமும் பரிசோதிப்பதற்காகத்தான் ஐ.க்யூ டெஸ்ட் எடுக்கப்படுகிறது. குழந்தைகள் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு மூளையின் ஏதோ ஒருபகுதி மட்டும் செயல்படவில்லை; பல பகுதிகளும் சேர்ந்து ஒருங்கிணைந்து வேலைபார்த்தால் மட்டுமே ஒரு குழந்தை நன்றாக இயங்க முடியும்.
அதனால், ஒரு குழந்தையின் ஐ.க்யூவை ஸ்கேன் மற்றும் ரத்தப்பரிசோதனை மூலம் பரிசோதிப்பது என்பது முடியாத ஒன்று.
மூளையின் வடிவமைப்பை மட்டுமே ஸ்கேன் மூலம் பார்க்க முடியுமே தவிர, மூளையின் செயல்பாடுகளை அல்ல.
ஐ.க்யூ டெஸ்ட் என்பது முழுக்க முழுக்க உங்கள் குழந்தையின் நடத்தையையும் மூளையின் செயல்பாடுகளையும் சார்ந்ததே ஆகும். ஒட்டுமொத்த நரம்பு இணைப்புகளும்தான் ஒரு குழந்தையை உளவியல்ரீதியாக நன்றாக இயங்க வைக்கிறது.
ஆறு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளில் இருந்து எந்த வயதுக்கு உட்பட்டவராக இருந்தாலும் ஐ.க்யூ டெஸ்ட் எடுக்க முடியும். ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து முதல் இரண்டு வருடங்களில்தான் அதன் மூளை வளர்ச்சி அடைகிறது. அதன்பின் 6, 7 வயது வரைதான் மூளையின் நரம்பு இணைப்புகள் நன்றாக செயல்பட தொடங்குகிறது. எனவே, 6,7 வயதிற்கு பிறகு ஐ.க்யூ டெஸ்ட் எடுப்பதுதான் உகந்ததாக இருக்கும்.
முதலில் அவர்களிடம் பல கேள்விகள் கொடுக்கப்படும். அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் எப்படி பதில் அளிக்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களிம் ஐ.க்யூ லெவலை பரிசோதிப்போம்.

ஒரு குழந்தைக்கு பேச, எழுத, கை, கால் அசைக்க, அதனுடைய வேலையை தானே செய்துகொள்ள வேண்டுமென்றால் அதன் மூளையின் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும். ஆனால், ஆட்டிஸம், ADHD (Attention Deficit / Hyperactivity Disorder) போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருந்தாலும், நடத்தை வேறு மாதிரியாக இருக்கும். அவர்களை மூளை வளர்ச்சிக் குன்றியவர்கள் என்று சிலபேர் அழைக்கிறார்கள். அது முற்றிலுமாக தவறு.
உதாரணத்திற்கு, மூளையின் பகுதிகள் பொதுவாக இணைக்கப்பட்டு இருக்கும் என்றால், இதுபோன்ற குழந்தைகளுக்கு வித்தியாசமாக இணைக்கப்பட்டு இருக்கும்.
அதாவது, மற்ற குழந்தைகளைவிட இந்த குழந்தைகளின் மூளையின் செயல்பாடு முற்றிலுமாக வேறுபட்டு இருக்கும். எனவே இவர்களைப் பற்றி புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் ஐ.க்யூ டெஸ்டிங் மூலம் இவர்களைப் புரிந்துகொள்வது என்பது எளிதாகி விடுகிறது.
அதுமட்டுமல்லாமல், ADHD குழந்தைகளுக்கு கவன குறைபாடு இருப்பதால் கற்றலிலும் அவர்களுக்கு குறைபாடு இருக்கும். பள்ளிகளில் அந்தக் குழந்தைகளின் நடத்தையும் மற்ற குழந்தைகளைவிட மாறுபட்டு இருக்கும்.
அதனால், மற்ற குழந்தைகளை அணுகுவதுபோல அவர்களை அணுக முடியாது. அதற்குத்தான் நாங்கள் ஐ.க்யூ டெஸ்ட் எடுக்கிறோம். அதில் வரும் முடிவுகளைப் பொறுத்து அவர்களுக்கு விளையாட்டு முறையிலேயே பயிற்சியும் அளிக்கிறோம்.

18 வயதிலிருந்து இரண்டு வயதுக்குள்ளேயே குழந்தை மற்றும் மனநல மருத்துவர்களை சந்தித்து பரிசோதனைகளை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை தலையீடுகளை கொடுக்கலாம்.
மூன்று வயது வரை, அனைத்து குழந்தைகளுக்குமே கற்றுக் கொள்கிற தன்மை சரியாக இருக்கும் என்பதால் நாம் சரியான முறையில் பயிற்சி கொடுத்தால் அவர்களின் ஐ.க்யூ லெவலை நிச்சயமாக அதிகரிக்க முடியும்.
இந்த வயதில் குழந்தைகளால் நாம் கேட்கும் கேள்விகளை புரிந்து கொள்ள முடியாது என்பதால் ஐ.க்யூ டெஸ்ட் எடுக்க மாட்டோம். அதற்கு பதிலாக அவர்களுடைய அறிவாற்றல் திறனுக்கு (cognitive capacity) ஏற்றவாறு அவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படும்.
ஆனால், வலிப்பு, தலையில் காயம் (Head injury), பெருமூளை வாதம் (Cerebral palsy) போன்ற மருத்துவரீதியான பிரச்னைகள் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு ஐ.க்யூ லெவல் குறைவாகத்தான் இருக்கும். அவர்களுக்கு ஐ.க்யூவை அதிகரிக்கச் செய்வது என்பது சிரமமான ஒன்று.
ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகள் அளவுக்கு மீறி சேட்டை செய்தாலும் அவர்களுடைய ஐ.க்யூ மிகவும் அதிகமாக இருக்கம். அதேபோன்று ஆட்டிசம் குழந்தைகளுக்கு எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் அவர்களைப் போன்று கவனமாக யாராலும் வேலை செய்ய முடியாது.
அவர்களை 'ஹியூமன் கம்ப்யூட்டர்ஸ்' என்றுகூட சொல்வார்கள். பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு தேதியை சொன்னால் அது என்ன கிழமையாக இருக்கும் என்றுகூட சிலர் பதிலளிப்பார்கள். அவர்களுக்கு தனித்திறமை இருந்தாலும், மற்ற குழந்தைகளைப்போல அவர்களும் வாழ்க்கையின் பல சிக்கல்கள சந்திக்கத்தான் செய்வார்கள்.
அதேபோன்றுதான் ஐ.க்யூ லெவல் அதிகமாக இருக்கும் குழந்தைகளும் நன்றாக படிக்கிறார்கள், அறிவோடு பேசுகிறார்கள் என்று அவர்களின் பெற்றோர்கள் பாராட்டுகிறார்களே தவிர, ஐ.க்யூ லெவல் அதிகமாக இருக்கும் குழந்தைகள், அன்றாடம் மற்றவர்களோடு பேசவும் பழகவும்கூட முடியாமல் தவிப்பதை பல பேர் புரிந்து கொள்வதே இல்லை.
இந்த சிக்கல் என்பது அவர்களின் பள்ளி பருவத்தில் தெரியாது. அவர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும்போதுதான் அதிகம் சிரமப்படுவார்கள்.
உதாரணமாக, ஞாபக சக்தி நன்றாக இருக்கும். ஆனால், சமூக திறன்கள் (socialising skills) குறைவாகவே இருக்கும். எதிர்காலத்தில் அவர்களது திருமண வாழ்க்கையில்கூட இதனால் சிக்கல்கள் வரலாம்.
எனவே உங்கள் குழந்தைகளுக்கு என்ன தனித்திறமைகள் இருந்தாலும், அதன் கூடவே அவர்கள் அதற்கான சிக்கல்களையும் நிச்சயமாக சந்திப்பார்கள். அதை உடனே கண்டறிந்து, பெற்றோர்கள், மனநல மருத்துவர்கள் அல்லது குழந்தை மருத்துவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதே நல்லது" என்கிறார் மனநல மருத்துவர், ஜனனி எஸ். பிரசன்னா.














