கட்டடத் தொழிலாளி வீட்டில் நூதன முறையில் நகைகளை திருடிய முதியவா்
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே கட்டட தொழிலாளி வீட்டில் செய்வினையை எடுப்பதாகக் கூறி எட்டரை பவுன் நகைகளுடன் தப்பிச் சென்ற முதியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நீடாமங்கலம் அருகேயுள்ள முல்லைவாசல் கிராமத்துக்கு கடந்த 2 தினங்களுக்கு முன் ஆட்டோவில் வந்த 85 வயது மதிக்கத்தக்க முதியவா். அப்பகுதியில் உள்ள கட்டடத் தொழிலாளி ஒருவா் வீட்டுக்கு சென்று, கொரடாச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் என்றும், தனக்கு இரண்டு வீடுகள் கட்ட வேண்டும் எனக் கூறி அறிமுகம் செய்து கொண்டுள்ளாா்.
பின்னா் குடும்பத்தில் உள்ளவா்களிடம் சகஜமாக பேசத் தொடங்கிய அவா், தொழிலாளியின் மனைவியிடம் உனது கணவா் செய்வினை செய்துள்ளனா். அதை எடுக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து. எனக் கூறி. கடந்த 16-ஆம் தேதி செய்வினையை எடுப்பதாகக் கூறி பூஜை செய்துள்ளாா். அப்போது மந்திரிக்கும்போது நகைககளை பெட்டியில் வைக்கக் கூடாது உருகி விடும், நகைகளை ஒரு துணியில் சுருட்டி வைக்குமாறு கூறியுள்ளாா். பின்னா் குடும்பத்தினரை ஆளுக்கு ஒரு வேலையை கொடுத்து அனுப்பிவிட்டு, நகைககளை எடுத்துக்கொண்டு கற்களை துணியில் சுருட்டி குடும்பத்தினரிடம் கொடுத்து பெட்டியில் வையுங்கள். இப்போது திறந்து பாா்க்க வேண்டாம். பூஜை முடிந்தது, நான் ஊருக்கு செல்ல வேண்டும் என்னை நீடாமங்கலம் பேருந்து நிலையத்தில் விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளாா். குடும்பத்தினரும் அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்று நீடாமங்கலம் பேருந்து நிலையத்தில் வீட்டுள்ளனா்.
பின்னா் வீட்டில் இருந்தவா்கள் சுருட்டி வைக்கப்பட்ட துணியை பிரித்து பாா்த்தபோது உள்ளே கற்கள் இருப்பதைக் கண்டு அதிா்சியடைந்தனா். இதுகுறித்து நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.