மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் கார் மீது கல்வீசித் தாக்குதல்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மகாராஷ்டிரத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் 2ஆம் கட்டமாக 38 தொகுதிகளிலும் நாளை (நவ.20) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மகாராஷ்டிரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) ஆகியவை சேர்ந்த மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவசேனை (ஷிண்டே அணி) 81 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
மகா விகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் 101 இடங்களில் போட்டியிடுகிறது. சிவசேனை உத்தவ் அணி 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 86 இடங்களிலும் போட்டியிடுகிறது.
கல்வீசித் தாக்குதல்
நேற்று மாலையுடன் மகாராஷ்டிரத்தில் பிரசாரம் நிறைவடைந்த நிலையில், மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சரும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அனில் தேஷ்முக் கார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நார்கேட் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தேஷ்முக், அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கார் கண்ணாடி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில், தேஷ்முக் பலத்த காயமடைந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய காவல் துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் போதா, ''அனில் தேஷ்முக் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கி உள்ளோம். தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண காவல் துறை முயற்சித்து வருகிறது'' எனக் குறிப்பிட்டார்.
தற்போது தாக்குதலுக்குள்ளான அனில் தேஷ்முக்கின் மகன் சலில் தேஷ்முக், கடோல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.