Wayanad: நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு - எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு
நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு பேரழிவு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்தும் ஆராத ரணமாக இருக்கிறது. உறவுகளையும் உடமைகளையும் கண்முன்னே நிலச்சரிவில் பறிகொடுத்து தவிக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளிக்க முடியாமல் கேரள அரசு திணறி வருகிறது. நூற்றாண்டு கண்டிராத இந்த பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியும், 2 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண தொகை வேண்டியும் மத்திய அரசை கேரளா வலியுறுத்தி வந்தது.
பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனை கூட்டமும் நடத்தினார். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதிமுறைகளில் வாய்ப்பில்லை எனவும், நிவாரண பணிகளுக்கான போதிய நிதி ஆதாரங்கள் கேரள அரசிடம் இருப்பதாகவும் மத்திய அரசிடம் இருந்து அண்மையில் பதில் அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த கேரள அரசியல் கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தன.
கேரளாவின் ஆளும் கட்சியான இடது ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி என இரண்டு தரப்பும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவிசிய தேவைகளுக்கான வாகனங்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர். சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
முழு அடைப்பு போராட்டம் குறித்து வயநாட்டின் இடது முன்னணி நிர்வாகிகள் , "பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கானவர்களை இழந்து தவிக்கிறோம். பல கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமங்கள், விளை நிலங்கள் என அனைத்தையும் மக்கள் பறிகொடுத்திருக்கிறார்கள். வேதனையில் துடிக்கும் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டிய மத்திய அரசு எங்களை வஞ்சிக்கிறது. மத்திய அரசுக்கு எதிரான முதல்கட்ட போராட்டம் தான் இது. அடுத்தக்கட்ட போராட்டங்கள் தொடரும் " என்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...