மகாராஷ்டிரத்தில் எங்களுக்கே வெற்றி: பாஜகவின் மன உறுதிக்கான காரணங்கள்!
Delhi: பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமான வேலைகளுக்குத் தடை... அச்சத்தை ஏற்படுத்தும் நச்சுக் காற்று!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அதிகாரிகள் பள்ளிகளை மூடவும், கட்டுமான வேலைகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர். டெல்லியில் ஏற்படும் காற்றுமாசு நீண்ட நாட்களாக செய்திகளில் பார்த்து வந்தாலும் இப்போது அபாயம் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
21 சிகரெட்களுக்கு சமம்!
நகருக்குமேலே நச்சுத்தன்மை கொண்ட ஸ்மாக் போர்த்தப்பட்டதுபோல காட்சியளிக்கிறது. வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புகையும் பனியும் சேர்ந்து ஸ்மாக் உருவாகியிருந்தாலும், இதனால் டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு காற்றின் தரக் குறியீடு AQI 969 என்ற அபாயகரமான உச்சத்தை எட்டியிருப்பதாக IQAir என்ற சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் நேரலை தரவரிசை காட்டுகிறது. இந்திய அளவீடுகளின் படி AQI 484 -ஐ எட்டியிருப்பதாக தேசிய மாசுக்கட்டுப்பாடு ஆணையம் கூறியுள்ளது.
இந்த அளவு மாசான காற்றை சுவாசிப்பது ஒரு நபர் ஒரு நாளுக்கு 21 சிகரெட்களை பிடிப்பதற்கு சமம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
AQI அளவீடு ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும். டெல்லி அதிகாரிகள் இதனை கடுமையான பாதிப்பு என்கின்றனர்.
காற்றில் PM2.5 எனப்படும் 2.5 மைக்ரான் அல்லது அதற்கு குறைவான விட்டம் உள்ள நுரையீரலுக்குள் நுழைந்து பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய துகள்களின் எண்ணிக்கை உலக சுகாதார அமையம் பரிந்துரைத்ததை விட 39 மடங்கு அதிகமாக இருக்கிறது.
அபாய நிலையில் 3 கோடி மக்கள்
ஒவ்வொரு குளிர்காலத்திலும் பனியுடன் புகை இணைந்து ஸ்மாக் என்ற நச்சாக உருவாகும். இது அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடியது. காற்று மாசு இன்னும் மோசமாகிவிடக் கூடாது என்பதற்காக பள்ளிகளை ஆன்லைனில் நடத்த உத்தரவிட்டுள்ளனர். கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்ததுடன் வாகன நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த நவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
குழந்தைகளை வீட்டில் இருக்க வைப்பது போக்குவரத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்பதனால் 10 மற்றும் 12ம் வகுப்பைத் தவிர மற்ற மாணவர்கள் ஆன்லைனில் பாடம் கற்பதாக முதலமைச்சர் அதிஷி கூறியுள்ளார்.
சிலர் வீடுகளில் ஏர் ஃபில்டர்களை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால் எல்லாராலும் பொருளாதார ரீதியாக அதனைப் பெற முடியவில்லை. மரணத்தை ஏற்படுத்தும், துர்நாற்றம் வீசும் புகையை சகித்துக்கொண்டு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டெல்லி மெட்ரோ சிட்டியை சுற்று வாழும் 3 கோடி மக்களில் பெரும்பாலோனோரின் நிலை இதுதான்.
என்ன காரணம்?
சட்டத்துக்குப் புறம்பாக விவசாய கழிவுகளை எரிப்பதனால் ஏற்பட்ட புகை 40 விழுக்காடு காற்று மாசு ஏற்பட்டதற்கு காரணம் என்கின்றனர். டெல்லியைப் போலவே ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களும் காற்றுமாசால் பாதிக்கப்பட்டுள்ளன. காலநிலையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காற்றின் வேகம் குறைவாக இருப்பதும் குறைந்த வெப்பநிலையும் மாசுத் துகள்கள் வெளியில் செல்லாமல் தடுக்கின்றன.
அரசின் நடவடிக்கைகள்
டெல்லி அரசு தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (Graded Response Action Plan (Grap)) என்ற திட்டத்தின் அடிப்படையில் செயல்படுகின்றனர். Grap திட்டத்தின் நான்காவது கட்டத்தை தற்போது அமல்படுத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, கட்டுமான மற்றும் இடிக்கும் பணிகள் நிறுத்தப்படுகின்றன, அத்தியாவசியமில்லாத தொழில்துறை யுனிட்கள் நிறுத்தப்படுகின்றன, டீசல் ஜெனரேட்டர்கள் மற்றும் பி.எஸ் 4 இல்லாத வாகனங்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
Grap நான்காம் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆம் ஆத்மி அரசு அதிக காலம் எடுத்துக்கொண்டதாக உச்ச நீதிமன்றம் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவலநிலை
இந்த கடுமையான காற்றுமாசு, சுவாசப் பிரச்னைகளையும் இதய நோயையும் உருவாக்கக் கூடியது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் இருக்கவும், வெளியில் வரும்போது என்95 மாஸ்க் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவையில்லாத உடல் செயல்பாடுகளைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் அன்றாட வாழ்க்கைத் தேவைகளைச் சந்திக்க மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இது பலருக்கும் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை உடனடியாக ஏற்படுத்தினாலும் வேறு வழியில்லாத நிலையே இருக்கிறது.