Delhi: `காற்றுமாசால் ஆயுட்காலம் குறைகிறது’... அவதிப்படும் டெல்லி மக்கள் - அதிர்ச்சி தகவல்கள்
டெல்லியில், காற்று மாசுபாடு என்பது அபாயகரமான நிலையை எட்டி இருக்கிறது. இந்த காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 25 முதல் 30 சிகரெட் பிடிப்பதற்கு சமமாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது மனிதனின் ஆயுள் காலத்தை குறைத்து, புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாட்டின் அளவானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் டெல்லி மாநகரம் முழுவதும் காற்றுமாசு காரணமாக புகையால் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக, நச்சு மூட்டத்தின் அளவு 247 ug/m3 ஆக உள்ளது. இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த 15 μg/m3 வழிகாட்டுதலை விட 80 மடங்கு அதிகமானதாகும். இதனால் காற்றின் தரக் குறியீட்டு அளவானது (AQI) 400க்கு மேல் உயர்ந்து, மிகவும் அபாயகரமான நிலையை அடைந்திருக்கிறது.
அதிக காற்று மாசுபாட்டின் காரணமாக தொடர்ச்சியான இருமல், கண்களில் நீர் வடிதல், காய்ச்சல், சிஓபிடி (நாட்பட்ட தடுப்பு நுரையீரல் நோய்), மூச்சுக்குழாய் அழற்சி, நாசியழற்சி மற்றும் நிமோனியா போன்ற பல நுரையீரல் நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் காற்றில் அதிக அளவு கலந்துள்ள சல்பர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு போன்றவைகளாகும்.
டெல்லியின் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 25 முதல் 30 சிகரெட் பிடிப்பதற்கு சமம் என்றும், இது ஆரோக்கியமான நுரையீரல் உள்ளவர்களுக்கு விஷம் என்றும் நுரையீரல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காற்று மாசுபாட்டின் காரணமாக டெல்லி மக்களின் ஆயுட்காலம் 7.8 ஆண்டுகள் குறைக்கிறது என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் ஆண்டு முழுவதும் ஏற்படும் தொழில்துறை மாசுபாடு, தேங்கி நிற்கும் காற்று மற்றும் கோதுமை விளையும் மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து வெளியேறும் புகைகள்தான். விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் உள்ள கழிவுகளை அகற்றி அடுத்த சாகுபடி பருவத்திற்கு தயார் செய்வதற்காக வைக்கோல்களை எரிக்கிறார்கள். இவை ஒன்றிணைந்து வளிமண்டலத்தில் மிகவும் நச்சுக் காற்றாக உருமாறி, சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதுதொடர்பாக மூத்த நுரையீரல் நிபுணர்கள் பேசுகையில், "மோசமான காற்று மாசுபாடு பிறக்காத குழந்தைகளையும் பாதிக்கிறது. குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். காற்றை சுவாசிக்காமல் பிறக்காத குழந்தை எவ்வாறு பாதிக்கப்படும்? என்று நீங்கள் ஆச்சரியப்படலாம், குழந்தையின் தாய் சுவாசிக்கும்போது, நச்சுகள் அவளது நுரையீரலுக்குச் செல்கின்றன. நுரையீரல் வழியாக அவை இரத்தத்தில் கலந்து, நஞ்சுக்கொடி மூலம், அவை குழந்தையை அடைகின்றன. இதனால் கரு சேதம் ஏற்படக்கூட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது" என்று கூறுகிறார்கள்.
மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டு ஜூலையில் தங்களது ஆய்வறிக்கையை வெளியிட்டனர். இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் புகைபிடிக்கவே இல்லை எனவும், காற்று மாசுபாட்டின் காரணமாகவே அதிகளவு புற்றுநோய் ஏற்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர். இந்த மாசுபாட்டைக் குறைக்க வீட்டில் காற்று சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்த நிபணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...