Gladiator 2 Review: வேங்கை வாழ்ந்த காட்டிலே வேங்கை வந்து நிரப்பிடும் கதையோ... சாதிக்கிறதா 2ம் பாகம்?
‘உன் உடல் அழிந்தாலும், புகழ் என்றுமே அழியாது’ இது கிளாடியேட்டர் முதல் பாகத்தின் இறுதி வசனம். அந்த வசனத்தைப் போலவே கிட்டத்தட்ட 24 ஆண்டுகளானாலும், ரோமாபுரியின் கொலோசியமும் அதில் தளபதியாக நின்று கர்ஜித்த மேக்சிமஸ் (ரஸல் க்ரோ) கதாபாத்திரத்தின் புகழும் இன்று வரை அழிந்துவிடவில்லை. அப்போது இந்த திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்த நபர்களின் சிலாகிப்பு இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அப்படியான கிளாசிக் பாரம்பரியத்தைக் கொண்ட அப்படத்தின் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கிறது.
முதல் பாகம் ரோம் பேரரசின் மன்னனான மார்க்கஸ் அர்லியஸ், போரில் ஜெர்மானிய பழங்குடிகளைத் தனது தளபதி மேக்சிமஸ் மூலம் வெற்றி கொள்கிறார். ஆனால் அந்த வெற்றிக்குப் பிறகு நிலத்துக்கான போரினை நிறுத்திக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார். அரியாசனத்துக்கான வாரிசாகத் தனது மகன் கமோடஸ்-க்குப் பதிலாகத் தளபதி மேக்சிமஸ் பெயரினை முன்மொழிகிறார். இதை அறிந்தவுடன் தந்தையைக் கொல்கிறான் மகன் கமடோஸ். அதேபோல மேக்சிமஸ் குடும்பம் அழிக்கப்பட்டு, அவர் அடிமையாக ப்ரோக்ஸிமோ என்பவரிடம் சேர்கிறார். அவர் உள்ளூர் சண்டைகளுக்கு மேக்சிமஸை அழைத்துச் செல்ல, அவனது வீரத்தின் காரணமாக ‘ஸ்பானியர்ட்’ என்ற புகழ் கிடக்கிறது. அதனால் ரோம் பேரரசின் கொலோசியத்தின் உள்ளே மக்களை மகிழ்விக்கும் காட்டுமிராண்டித்தனமான சண்டையில் கிளாடியேட்டராக உள்ளே நுழைகிறார். இறுதியில் கமோடோஸை கொன்று தனது மன்னர் மார்க்கஸ் அர்லியஸ் கனவினை படைவீரர்களிடம் கூறிவிட்டுத் தன் உயிரை விடுகிறான்.
இப்போது வெளியாகியிருக்கும் இரண்டாம் பாகம் மேக்சிமஸின் மரணத்திற்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைக் காட்டுகிறது. மார்க்கஸ் அர்லியஸ் கனவு கண்ட ரோமுக்கு மாறாக எங்கும் ஊழல் பரவி, இறந்த கமோடாஸின் மகன்களான பேரரசர் ஜெட்டா (ஜோசப் குயின்) மற்றும் பேரரசர் கரகல்லா (ஃப்ரெட் ஹெச்சிங்கர்) ஆகியோரால் ஆளப்படுகிறது. இவர்களின் ஆட்சியின் தளபதி மார்க்கஸ் அகாசியஸ் (பெட்ரோ பாஸ்கல்) ரோமின் எல்லைகளை விரிவுபடுத்த அருகிலுள்ள நுமிடியாவை வெற்றி கொள்கிறார். அங்கே இருக்கும் அந்நாட்டு வீரர்களையும் கைப்பற்றுகிறார். அதில் ஹன்னோ (பால் மெஸ்கல்) என்ற வீரன் தனது மனைவியை இழந்து போர்க் கைதியாக ரோமுக்கு அடிமையாகக் கொண்டுவரப்படுகிறார். அவரது துணிச்சலைப் பார்க்கும் மார்கினியஸ் (டென்சல் வாஷிங்டன்) அவரை கிளாடியேட்டராக மாற்றுகிறார். படம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரிய, ஹன்னா முதல் பாகத்தில் மறைந்த மேக்சிமஸுக்கும், ராணி லூசில்லாவுக்கும் ரகசியமாகப் பிறந்த மகனான லூசியஸ் என்பது தெரிய வருகிறது. இதையடுத்து தனது தந்தையின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுகிறானா லூசியஸ், 'ரோமில் குடியரசு' என்னும் தனது தாத்தாவின் கனவை நிறைவேற்றுகிறானா என்பதே இரண்டாம் பாகத்தின் கதை.
இயக்குநர் ரிட்லி ஸ்காட், ஒளிப்பதிவாளர் ஜான் மேத்தியசனுடன் இணைந்து ரோமின் மகத்துவத்தைக் காட்ட நவீனத் தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்தியுள்ளார். மெய்சிலிர்க்க வைக்கும் செட் டிசைன்கள் முதல் தீவிரப் போர்க் காட்சிகள் வரை, படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாண்டம் கண்களை விரியவைக்கின்றன. குறிப்பாகத் தொடக்கப் போர்க் காட்சி, குரங்கைப் போன்ற கொடூர விலங்கிடம் நாயகன் போரிடும் இடம், கொலோசியம் முழுக்க நீரால் நிரம்பி சுறாக்களுடன் நடக்கும் யுத்தம் ஆகியவை பிரமிப்பூட்டும் அனுபவத்தைத் தருகின்றன. காரண காரியமில்லாமல் அடித்து மல்லுக்கட்டாமல் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளுக்கும் முன்னும் பின்னும் எமோஷன்களை நிரப்பியிருப்பது ப்ளஸ் பாயிண்ட். அதேபோல தாய் தனது மகனை உணர்கிற தருணத்தை ஒரு கவிதையோடு சேர்த்துக் கொடுத்த விதம் கவித்துவமானது.
முகமூடியைக் கழட்டி நான்தான் மேக்சிமஸ் என்று பார்வையாலே மிரட்டும் ரஸல் க்ரோவின் வழித்தோன்றலாக யார் நடித்தாலும் ஈடாகாது என்கிற பேச்சுக்கள் இருந்த போதிலும் அதை அட்டகாசமாகக் கையாண்டிருக்கிறார் பால் மெஸ்கல். அதிலும் கையில் மண்ணைத் தட்டி கொலோசியத்தில் நுழைகிற இடம், “வேங்கை வாழ்ந்த காட்டிலே வேங்கை வந்து நிரப்பிடும் கதையோ” எனப் புல்லரிக்க வைக்கிறது. கிளேடியேட்டர்களின் தலைவனாக வரும் டென்சல் வாசிங்டன் ஒவ்வொரு காட்சியிலும் பட்டாசான வசனங்களால் கவர்கிறார். அதிகாரத்தின் மிதப்பில் அலையும் இரட்டையர் அரசர்கள் கதாபாத்திரத்தின் நோக்கமான எரிச்சலைத் தந்து வெற்றி பெறுகிறார்கள் ஜோசப் க்வின்னும் ஃப்ரெட் ஹெச்சிங்கரும்! படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் எந்த இடத்திலும் ஒப்புக்கென வந்து போகிறவர்களாக இல்லாமல் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
முதல் பாகத்தின் பெருமையைக் கெடுக்காமல் சரியான அளவில் நாஸ்டால்ஜியாவை சேர்த்துச் சிறப்பான திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார்கள். அங்கங்கே யூகிக்கக்கூடிய காட்சியமைப்புகள் இருந்தாலும் படத்தின் ஆழமான வசனங்கள் அதை மறக்க வைக்கின்றன. குறிப்பாக, “பேரரசுகள் வீழ்ச்சியடைகின்றன, பேரரசர்கள் இறக்கின்றனர். எல்லோரும் மறக்கப்படுவார்கள்.", “வீரர்களே சினம் உங்கள் பரிசு. அதை ஒருபோதும் விடாதீர்கள். அது உங்களை மேன்மைக்கு அழைத்துச் செல்லும்”, “மரக்கட்டையோ உலோகமோ கூரிய முனையின் குறி ஒன்றுதான்” என்னும் வசனங்கள் படத்தோடு ஒன்ற வைக்கின்றன. காதல் மனைவியின் பிரிவுக்கு ஒரே ஒரு மோதிரக் காட்சி இருந்தாலும், அதன் பின்னர் வரும் கனவுலக காட்சிகளும் அதற்கான மெல்லிய இசையும் உறவின் ஆழத்தை விவரிக்கின்றன. ஆக்ரோஷமான ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிகளாக இருந்தாலும் இசையை அலறவிடாமல் காட்சிக்கு என்ன தேவையோ அதைச் செய்து கலக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரி கிரெக்சன்-வில்லியம்ஸ்.
முதல் பாகத்தினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்களுக்குச் சற்றே எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றாலும், சிறப்பான வசனங்கள், பிரமாண்டமான ஆக்கம் என முதல் பாகத்துக்குப் பங்கம் வராத அளவுக்கு, ‘உன் புகழ் என்றுமே அழியாது’ என்ற அளவுக்கு நியாயம் செய்திருக்கிறது இந்த இரண்டாம் பாகம்.