Inbox 2.0 Eps 11: உங்கள் கோரிக்கை நிறைவேறியது! | Cinema Vikatan
`கூட்டத்துக்கு வந்தால் இலவச நாற்காலி' வித்தியாசமாக ஆள் சேர்த்த அதிமுக நிர்வாகி-வைரலாகும் வீடியோ
கொள்கைக்காக கூட்டம் சேர்ந்த காலம்போய் தற்போது இலவசத்துக்கும், பணத்துக்கும் பரிசுப் பொருள்களுக்கும் கூட்டம் சேரும் நிலை வந்துவிட்டது. இதை பல அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பார்த்ததுண்டு. அரசியல் கட்சிகளின் மீதான முக்கிய விமர்சனமாகவே இது முன்வைக்கப்படுகிறது.
அந்த வகையில், திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் அதிமுக-வின் 53-ஆம் ஆண்டு விழா பொதுக் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க வித்தியாசமான அறிவிப்பை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளரான வேல்குமார் சாமிநாதன் கையாண்டுள்ளது தற்போது பேசு பொருளாகியுள்ளது. அதாவது, கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் கூட்டம் முடிந்த பின் தாங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். இதற்காக புதிதாக 2000 நாற்காலிகள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது என்பதே அந்த அறிவிப்பு.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில் கூட்டம் நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்தது.இலவச நாற்காலி அறிவிப்பால் மாலை 6 மணி முதலே மக்கள் குவியத் தொடங்கினர். வழக்கமாக கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மக்கள் வெளியேறத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், முன்னாள் அமைச்சர்கள் விஜய பாஸ்கர், சரோஜா, பொள்ளாச்சி ஜெயராமன் எனப் பலரும் சுமார் இரண்டரை மணி நேரத்துக்கு மேலாக பேசியும் கூட்டம் கலையாமல் அப்படியே இருந்தது.
எழுந்து சென்றால் நாற்காலி கிடைக்காது என்பதால் மக்களும் அசையாமல் உட்கார்ந்திருந்தனர். யாராவது எழுந்தால் நாற்காலியைப் பிடிக்க ஒரு கூட்டம் தயாராக இருந்தது. ஒரு வழியாகக் கூட்டம் முடித்ததும் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை தலையில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு நடையைக் கட்டினர். கூட்டம் சேர்ப்பதற்காக புதுயுத்தியாக நாற்காலிகளை அதிமுக நிர்வாகி வழங்கியது தெரிந்து பலரும் நாமும் அதிமுக கூட்டத்திற்கு சென்றிருக்கலாமே என்று பேசிக்கொண்டு சென்றதைக் காண முடிந்தது. 2000 பேரும் தலையில் நாற்காலியை வைத்துக் கொண்டு நடந்து சென்றது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளரான வேல்குமார் சாமிநாதனிடம் பேசினோம். "அதிமுக-வைத் தேடி எப்போதும் மக்கள் வருவார்கள். மக்களுக்கு நலத் திட்ட உதவி வழங்குவதுபோலத்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டேன். இதற்காக முன்கூட்டியே 2000 நாற்காலிகளை வாங்கி வைத்திருந்தேன்.இது இவ்வளவு வைரலாகும் என்று தெரியவில்லை" என்றார்.