RSS கோட்டையில் ரோடு ஷோ: கறுப்புக்கொடி காட்டிய பாஜக-வினருக்கு பிரியங்கா காந்தி பதிலடி
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரண்டு நாள்கள் தீவிரமாக பிரசாரம் செய்தார். அவர் ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகம் இருக்கும் நாக்பூரில் ரோடு ஷோ நடத்தினார். மக்கள் கூட்டத்தில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ வாகனம் வந்தபோது சாலையோரத்தின் இரண்டு பக்கமும், கட்டடத்தின் மேலே நின்றவர்களையும் பார்த்து கையை அசைத்தபடி சென்றார்.
ரோடு ஷோடு முடியும் இடத்தில் வந்தபோது, சாலையோரம் இருந்த கட்டடம் ஒன்றின் மாடியில் இருந்து சிலர் கறுப்புக்கொடி காட்டி பா.ஜ.கவிற்கு ஆதராக கோஷம் எழுப்பினர். இதனால் காங்கிரஸ் கட்சியினரும் எதிர்த்து கோஷமிட்டனர். அதனை பார்த்த பிரியங்கா காந்தி, உடனே மைக்கில் கறுப்பு கொடி காட்டியவர்களை நோக்கி பேசினர். ``பா.ஜ.க நண்பர்களே, தேர்தலுக்கு வாழ்த்துக்கள். ஆனால் தேர்தலில் மகாவிகாஷ் அகாடிதான் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார். உடனே காங்கிரஸ் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
ரோடு ஷோ முடிந்த பிறகு காங்கிரஸ் வேட்பாளர் ஷெல்கே ஆதரவாளர்களுக்கும், பா.ஜ.க தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரோடு ஷோ நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா காந்தி, ''தேர்தலில் வாக்காளர்களை கவருவதற்காக மஹாயுதி கூட்டணி தேர்தலுக்கு 4 மாதத்திற்கு முன்பு பெண்களுக்கு மாதம் ரூ.1500 கொடுக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது. மகாவிகாஷ் அகாடி ஆட்சிக்கு வந்தவுடன் இந்த தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும். நீங்கள் ரூ.1500 கொடுத்துவிட்டு பால், உணவு தானியம் உட்பட அனைத்து பொருட்களின் விலையையும் அதிகரித்துவிட்டீர்கள்.
பழங்குடியின மக்கள் விரோத கொள்கையை மத்திய மாநில அரசுகள் பின்பற்றுகின்றன. பழங்குடியின மக்களின் நிலத்தை தனியாருக்கு கொடுக்கின்றனர். வன உரிமையை பறிக்கிறனர். பழங்குடியினரின் உரிமைகள் அவர்களது பிறப்புரிமை. மகாராஷ்டிராவிற்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் குஜராத்திற்கு சென்றுள்ளது. இதனால் மகாராஷ்டிரா 10 லட்சம் கோடி முதலீட்டை இழந்துள்ளது. அதோடு மகாராஷ்டிராவிற்கு வரவேண்டிய 8 லட்சம் வேலை வாய்ப்புகள் குஜராத்திற்கு சென்று இருக்கிறது. மகாராஷ்டிராவில் 6 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இட ஒதுக்கீடு விவகாரத்தில் குறிப்பாக சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டும்''என்று தெரிவித்தார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...