தாராவி நிலத்தை அரசு அதானிக்கு தாரைவார்க்கலாமா? - தேர்தல் பிரசாரத்தில் காங்.
முதல் 2 வாரம் படத்தை விமர்சிக்கக் கூடாது; FDFS ரிவ்யூவுக்கு நோ; திருப்பூர் சுப்ரமணியம் சொல்வதென்ன?
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியம், திரையரங்க உரிமையாளர்களுக்குச் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.
இதுதொடர்பாக, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம். அந்த ஆடியோவில் அவர் பேசியதாவது,
"இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் படத்தைத் திரையிட வேண்டும். தமிழகத்தில் புதிய திரைப்படங்களுக்கான சிறப்புக் காட்சி காலை 9 மணிக்குத்தான் நடக்கிறது. அதே சமயம் மற்ற மாநிலங்களில் அதிகாலை வேளைகளில் ஆரம்பமாகிறது. மற்ற மாநிலங்களிலும் சிறப்புக் காட்சிகளைத் தமிழகத்தில் ஆரம்பமாகும் நேரமான 9 மணிக்கே ஆரம்பிக்க வேண்டும்" என்ற கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், "இரண்டு வாரக் காலத்திற்குப் படத்தை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. நீதிமன்றத்தை அணுகி இரண்டு வாரக் காலத்திற்கு யாரும் விமர்சனம் செய்யக் கூடாது எனத் தடை வாங்க வேண்டும். பல கோடி ரூபாய் போட்டு படம் எடுத்தால் அதிகாலை காட்சியில் சினிமாவை பார்த்துவிட்டு, தமிழகத்தில் காட்சிகள் ஆரம்பமாவதற்கு முன்பாகவே யூடியூப் சேனல்களில் விமர்சனம் என்ற பெயரில் படத்தைக் காலி செய்கிறார்கள். சமீப காலங்களில் இப்படியான விமர்சனங்கள் வரைமுறை இல்லாமல் இருக்கிறது.
திரையரங்க வளாகத்திற்குள் யூடியூப்பர்களை அனுமதிக்க வேண்டாம்
தியேட்டர் வளாகங்களில் ரசிகர்களின் கருத்து என யூடியூப்பர்கள் வீடியோ எடுப்பதை அனுமதிக்கக் கூடாது என நாமே கட்டுப்பாடு விதித்துவிட்டு அதை மீறி வருகிறோம். அப்படி வீடியோ எடுப்பதை தியேட்டர் உரிமையாளர்கள் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அனுமதிப்பது நமது வியாபாரத்தை நாமே சிதைப்பது போன்றது. சிலரின் தவறான விமர்சனங்களால், ஏராளமான படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. இந்த வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் படங்களும், சமீபத்தில் 'கங்குவா' படமும் கடுமையான விமர்சனங்களால்தான் மக்கள் வருவது பாதிக்கப்பட்டது.
கேரளாவில் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகி தனது படங்களுக்கு விமர்சனம் செய்யத் தடை வாங்கியதைக் கேள்விப்பட்டேன். அது போலவே இங்கும் தயாரிப்பாளர் சங்கம் செய்ய வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...