Nayanthara: "அந்த நபராலத்தான் நான் சினிமாவில் இருந்து விலகினேன்"- எமோஷனலாகப் பேசிய நயன்தாரா
நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் வாழ்க்கை, திருமணம் பற்றிய 'Nayanthara: Beyond the Fairytale' என்ற ஆவணப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. அதில் நயன்தாரா, சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தது ஏன் என்பது குறித்து எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.
அந்த ஆவணப்படத்தில் பேசியிருக்கும் அவர், " ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தில் கடைசி ஷாட் எடுக்கும்போது எனக்கு ஒருமாதிரி இருந்தது, எனக்கே தெரியாமல் அப்போது அழுதேன். எனக்கு சினிமாதான் எல்லாமே, அப்படிப்பட்ட சினிமாவில் இருந்து விலக முடிவு செய்தது கஷ்டமாக இருந்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் நான் திரைத்துறையில் இருந்து வெளியேறியதற்கு காரணம் அந்த நபர்தான். ( ரிலேஷன்சிப்பில் இருந்த நபர்)
அவர்தான் என்னை சினிமாவில் இருந்து விலகச் சொன்னார். எனக்கு அதில் விருப்பமில்லை, எனக்கு எந்த ஒரு ஆப்ஷனும் கொடுக்கவில்லை. ஒரே வார்த்தையில் இனி சினிமாவில் வேலை செய்யக்கூடாது என அந்த நபர் சொல்லிவிட்டார்.
எனக்கு வேறு வழியே இல்லை. வாழ்க்கையை புரிந்துகொள்ள அப்போது எனக்கு முதிர்ச்சி இல்லை. தவறு செய்வது சகஜம்தான். தவறை நினைத்து வருத்தப்படுவதும் சரியானதுதான். எல்லோரும் என் கதை முடிந்தது. நான் அவ்வளவுதான் என்று நினைத்தார்கள்.
திடீரென தெலுங்கில் நாகார்ஜுனா படத்திலும், தமிழில் `ராஜா ராணி' படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பைத் தொடர்ந்துதான் நான் சினிமாவில் மீண்டும் நடிக்க தயாரானேன்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்துக் கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...