‘வணங்கான்... கனத்த இதயத்துடன்...’ அருண் விஜய்யின் திடீர் பதிவு!
Kanguva: "சூர்யாவுக்கு எதிராகக் கொந்தளிப்பவர்கள்; சமூகப் பிரச்னைக்கு கொந்தளிப்பதில்லை"- இரா.சரவணன்
சூர்யா நடிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்தது.
இந்த படம் குறித்த விமர்சனங்களுக்கு சமீபத்தில் ஜோதிகா, "கண்டிப்பாக கங்குவா படத்தில் முதல் அரைமணி நேரம் சத்தம் பிரச்னையாகவே இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மொத்தம் 3 மணி நேரம் வெளியான கங்குவா படத்தில் ஒரு அரை மணி நேரம்தான் அப்படியிருக்கிறது. தமிழ் சினிமாவில் இது போல் கேமரா பயன்பாடுகளை பார்த்ததே இல்லை. பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் நன்றாகவே இல்லாத படங்களுக்குகூட இத்தகைய விமர்சனங்கள் வந்ததில்லை. ஆனால் ஊடகங்களில் இருந்து கங்குவாவுக்கு எதிராக இது போன்று எதிர்மறையான விமர்சனங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். பெண்களை இழிவாக சித்தரித்து இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட படங்களுக்குக்கூட இப்படி விமர்சனங்கள் வந்ததில்லை. படம் வெளியான முதல் நாளே இது போன்று அவதூறுகள் பரப்பப்பட்டன." என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த விவகாரத்தில் 'கங்குவா' படத்தை விமர்சிக்கலாம். ஆனால், இனி இப்படியான முயற்சியை தமிழில் யாருமே செய்துவிடக் கூடாது என்னும் அளவிற்கு கடுமையான விமர்சனங்களை உள்நோக்கத்துடன் பரப்புவது தவறானது என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது 'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே', 'நந்தன்' படங்களை இயக்கிய இரா.சரவணன், "சினிமாவிற்காகக் கொந்தளிப்பவர்கள், சமூக பிரச்னைகளுக்காக இவ்வளவு கொந்தளிப்பதில்லை" என்றும் "சினிமாகாரர்களை இந்தளவுக்குக் கொண்டாடவும் தேவையில்லை. இவ்வளவு மோசமாகக் குறை சொல்லவும் தேவையில்லை" என்று நீண்ட பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில் குறிப்பாக,
"1.சினிமாகாரர்களை இந்தளவுக்குக் கொண்டாடவும் தேவையில்லை. இவ்வளவு மோசமாகக் குறை சொல்லவும் தேவையில்லை.
2.இந்தக் கோபத்தை ஆவேசத்தை தட்டிக் கேட்கும் தைரியத்தை சினிமாவுக்கு எதிராக மட்டும் காட்டாமல், நம்மை ஏமாற்றும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் காட்டுவோம். சினிமா நம் பொழுதுபோக்கு. பொழுது அதைவிட முக்கியம். 3மணி நேரம் வீணாகி விட்டதாகப் புலம்பும் நாம், நம் எம்.பி, எம்.எல்.ஏ. உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு 5 வருடங்களைக் கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
3. சில சண்டைகளில் என்ன ஏதென்றே தெரியாமல் போவோர் வருவோரும் சேர்ந்து அடிப்பதுபோல், பெரும்பான்மை கருத்து என்பதாலேயே அதற்கு வலு சேர்க்கும் வேலைகளை ஒருபோதும் செய்யாதீர்கள். ஆய்ந்தறியுங்கள். உங்கள் மனம்தான் உயர்ந்த நீதிபதி. பி.கு: நடிகர் சூர்யாவை விமர்சிக்க நமக்கு உரிமை இருக்கிறது. சூர்யாவை விமர்சிக்க அல்ல…" என்று 'கங்குவா' படத்திற்கு வரும் நெகட்டீவ் விமர்சனங்கள் குறித்து தனது கருத்தைக் கூறியிருக்கிறார் இயக்குநர் சரவணன்.