Madurai Shooting: விக்ரம், விஜய் சேதுபதி, தனுஷ்... - மதுரைக்குப் படையெடுக்கும் ஹீரோக்கள்
ஒரு காலகட்டத்தில் இந்திய சினிமாவின் தாய்வீடு என்றால் கோடம்பாக்கத்தை தான் சொல்வார்கள். தமிழில் இருந்து இந்தி வரைக்கும் இங்குள்ள ஸ்டூடியோக்களில் தான் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
அதன் பின், சினிமா அவுட்டோர் போனது. 1980களில் தொடங்கி 1990 வரைக்குமே அந்த காலகட்டங்களில் படப்பிடிப்பு என்றால் கோபிச்செட்டிப்பாளையம், பொள்ளாச்சி ஏரியாக்களில் தான் பெரும்பாலான சினிமாக்காரர்கள் கிளம்பிப் போயிருக்கிறார்கள். அதன் பின், நெல்லை, தென்காசி எனப் பல இடங்களில் படப்பிடிப்புகள் நடந்து வந்தன. அதன் பிறகு சிலகாலம் மதுரை, தேனியைச் சுற்றி சினிமா யூனிட் வாகனங்கள் விரைந்தன. அப்போது மதுரை சினிமாக்கள் அதிகமாக வந்தன. பின் அந்த எண்ணிக்கை கொஞ்சம் குறைந்தது. சமீபகாலமாக பெரிய ஹீரோக்களின் படப்பிடிப்புகள் மீண்டும் மதுரை ஏரியாக்களில் பரபரக்கின்றன. விக்ரமின் 'வீர தீர சூரன் பார்ட் 2' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மதுரையில் தான் நடந்திருக்கிறது.
'வீர தீர சூரன்' படத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா எனப் பலரும் நடித்திருக்கின்றனர். 'சித்தா' எஸ்.யூ. அருண்குமார் இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். கடந்த ஒருசில வாரத்திற்கு முன்னர் இதன் படப்பிடிப்பு மதுரையில் மேலூர் பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.
இப்போது, பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பு மதுரை ஏரியாக்களில் தொடங்கி, முதற்கட்ட படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அங்கே அழகர் குளம், தெப்பக்குளம் பகுதிகளில் நடந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காகவும் மதுரைக்கு வருகின்றனர். தனுஷின் 'இட்லிகடை' படத்தின் மூன்றாவது ஷெட்யூல் படப்பிடிப்பு தேனி, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இப்போது மதுரையில் நடந்து வருகிறது. இந்த இரண்டு படங்களிலும் நித்யா மேனன் தான் ஹீரோயின்.
இது தவிர 'ஜெய்பீம்' மணிகண்டன் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பும் ஒத்தகடை பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது. ''இப்போது கிராமத்து கதைகள் அதிகம் வருகின்றன. வயல்வெளி, வெட்டவெளி, பெட்டிக்கடை, டீக்கடை, ஓட்டு வீடு என இயல்பான கிராமங்கள் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளதால் கதைக்களன்களுக்கு செட் அமைக்கும் வேலைகளுக்கு அவசியமில்லாமல் போய்விடுகிறது. இங்கே மழை பெய்தாலும் கூட, சில இயக்குநர்கள் ஷூட்டிங்கிற்கு பிரேக் விடுவதில்லை. மாறாக மழையையும் விட்டு வைக்காமல், மழைக்காட்சியை எடுக்கின்றனர். கதைக்கும் இயல்பான சூழலாக அமைந்துவிடுகிறது. இப்படி பல்வேறு வசதி வாய்ப்புகளுக்காக பலரும் மதுரைக்கு படையெடுக்கின்றனர்.'' என்கிறார்கள்.