ஆஸி.க்கு எதிராக விராட் கோலி சிறப்பாக விளையாட இந்த ஒரு விஷயம் போதும்: முன்னாள் கேப்டன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாட, அங்கு அவர் படைத்துள்ள சாதனைகளே அவருக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஏற்பட்ட வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, இந்திய அணி மிக முக்கிய பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படிக்க: விராட் கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்; மீதமிருப்பது ரோஹித் சர்மா மட்டும்தான்!
இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஃபார்ம் கவலையளிப்பதாக உள்ளது. கடந்த 60 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விராட் கோலி வெறும் இரண்டு சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் மட்டுமே எடுத்துள்ளார். அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரும் விராட் கோலிக்கு சிறப்பானதாக அமையவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் அவர் வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மிகுந்த பசியுடன் விராட் கோலி
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக அளவில் ரன்கள் குவிக்க முடியாததால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற அதிகப்படியான பசியுடன் விராட் கோலி இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் கோலி அதிகம் ரன்கள் எடுக்காததால், அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற அதிகப்படியான பசியுடன் அவர் இருப்பார். இந்திய அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்த அடிலெய்டில் கூட விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 70-க்கும் அதிகமான ரன்கள் குவித்திருப்பார். அடிலெய்டில் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஐபிஎல் மெகா ஏலமா? பெர்த் டெஸ்ட் போட்டியா? மெகா ஏலம்தான்... ஆஸி. பயிற்சியாளர் முடிவு!
அடிலெய்டு மைதானம் எப்படி இருக்குமென அவருக்கு நன்றாகத் தெரியும். அடிலெய்டு மைதானத்துக்கு முன்பாக, 2018-2019 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரின்போது, பெர்த் மைதானத்தில் சிறப்பான சதத்தைப் பதிவு செய்தார் விராட் கோலி. அடிலெய்டு மற்றும் பெர்த் மைதானங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது விராட் கோலியின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். அவருக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தால், எதிர்வரும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் பெரிய அளவில் ரன்கள் குவிப்பார் என்றார்.