ஐபில் மெகா ஏலமா? பெர்த் டெஸ்ட் போட்டியா? மெகா ஏலம்தான்... ஆஸி. பயிற்சியாளர் முடிவு!
ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தவறவிடுகிறார்.
ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்குவதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: “பெருமை கொள்கிறேன்...” இளம் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!
மெகா ஏலமா? பெர்த் டெஸ்ட் போட்டியா?
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, சௌதி அரேபியாவுக்கு செல்லவுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மிக முக்கியமான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டேனியல் வெட்டோரி ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்பதற்காக சௌதி அரேபியா செல்லவிருக்கிறார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி சிறப்பாக செயல்படுவதற்கு நாங்கள் மிகுந்த ஆதரவாக இருக்கிறோம். ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ள புறப்படும் முன்பாக பெர்த் டெஸ்ட் போட்டிக்கு தேவையான பயிற்சியினை அவர் அணிக்கு அளித்துவிடுவார். ஐபிஎல் மெகா ஏலம் முடிந்தவுடன் மீண்டும் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து, பார்டர் - கவாஸ்கர் தொடர் முழுவதும் பயிற்சியளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: திலக் வர்மாவுக்கு 3-வது இடத்தை விட்டுக்கொடுக்கிறாரா சூர்யகுமார் யாதவ்?
பெர்த் டெஸ்ட் போட்டியில் டேனியல் வெட்டோரிக்குப் பதிலாக அந்த இடத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய பயிற்சியாளர் லாச்லன் ஸ்டீவன்ஸ் தற்காலிகமாக அணியின் பயிற்சியாளராக செயல்படுவார்.
டேனியல் வெட்டோரி மட்டுமின்றி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரிக்கி பாண்டிங் மற்றும் லக்னௌ அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் லாங்கரும் தங்களது வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகி ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.