முதல் போட்டியில் முக்கிய வீரர்கள் இல்லை; இந்திய அணியுடன் இணையும் இளம் வீரர்!
பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்தியா ஏ அணியில் இடம்பெற்ற இளம் வீரர் இந்திய அணியுடன் இணையவுள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகிற நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: ரவிச்சந்திரன் அஸ்வினிடம் நான் கவனமாக இருக்க வேண்டும்: மூத்த ஆஸி. வீரர்
இந்திய அணியுடன் இணையும் படிக்கல்
பார்டர் - கவாஸ்கர் தொடரின் பிரதான போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக, இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று விளையாடிய இந்தியா ஏ அணி வீரர்கள் தாயகம் திரும்பவுள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் விளையாடுவது உறுதியாகாத நிலையில், இந்தியா ஏ அணியில் இடம்பெற்று விளையாடிய தேவ்தத் படிக்கல் ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணியுடன் இணையவுள்ளார். அவர் இந்தியா ஏ அணி வீரர்களுடன் தாயகம் திரும்பப் போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு நாதன் மெக்ஸ்வீனி சரியான தேர்வா? மேத்யூ ஹைடன் பதில்!
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணியில் விளையாடிய தேவ்தத் படிக்கல் 36, 88, 26 மற்றும் 1 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.