ஆபத்தை உணராததுக்கான விலையை கொடுத்துவிட்டோம், இனியும் கூடாது: முன்னாள் தலைமைப் பயிற்சியாளர்
ஆபத்தை உணராமல் விளையாடியதுக்கான மிகப் பெரிய விலையை ஏற்கனவே கொடுத்துவிட்டோம் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஏற்பட்ட வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, இந்திய அணி மிக முக்கிய பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படிக்க: விராட் கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்; மீதமிருப்பது ரோஹித் சர்மா மட்டும்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததன் மூலம், சொந்த மண்ணில் 12 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வந்த இந்திய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. அதோடு மட்டுமல்லாது, 3 அல்லது அதற்கும் மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையையும் நியூசிலாந்து படைத்தது.
மிகப் பெரிய விலையை கொடுத்துவிட்டோம்
பார்டர் - கவாஸ்கர் தொடர் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் விளையாடியதுக்கான மிகப் பெரிய விலையை ஏற்கனவே கொடுத்துவிட்டோம் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் தொடர் தோல்வியிலிருந்து மீண்டு இந்திய அணி சிறப்பாக விளையாடுவார்கள். ஏனெனில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆபத்தை உணராமல் விழிப்புணர்வின்றி விளையாடி தொடரை இழந்துவிட்டார்கள். அவர்கள் சற்று வெற்றியாளர்கள் மனநிலையில் இருந்து விளையாடியதுக்கான மிகப் பெரிய விலையை கொடுத்துவிட்டார்கள். ஆனால், இந்திய அணி மிகவும் சிறப்பான அணி. நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியிலிருந்து அவர்கள் விரைவில் மீண்டு வலிமையாக வருவார்கள்.
இதையும் படிக்க: ஐபிஎல் மெகா ஏலமா? பெர்த் டெஸ்ட் போட்டியா? மெகா ஏலம்தான்... ஆஸி. பயிற்சியாளர் முடிவு!
வரலாற்று தோல்வியிலிருந்து வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கு பார்டர் - கவாஸ்கர் தொடரை அவர்கள் சிறப்பாக தொடங்க வேண்டும். அதனால், இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கப் போகின்றன. வீரர்கள் நல்ல மனநிலையில் இந்த தொடரை சிறப்பாக தொடங்க வேண்டும். தொடரை வெற்றியுடன் சிறப்பாக தொடங்குவது அணியின் பயிற்சியாளருக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
எதிர்மறையான விஷயங்களை மனதுக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம். நேர்மறையான விஷயங்களைப் பற்றி மட்டுமே வீரர்கள் சிந்திக்க வேண்டும். கடந்த முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றார்.