கடைசி டி20: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
தண்டனையா? கழிப்பறைக்காக பல மணி நேரம் காத்திருக்கும் வேலூர் சிறைக் கைதிகள்!
வேலூர் மத்திய சிறையில், ஆண்களுக்கான பிரிவில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகளுக்கு, சிறைவாழ்வை விட, கழிப்பறைக்காக பல மணி நேரம் காத்திருப்பதுதான் கொடுந்துயரமாக மாறியிருக்கிறது.
கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்றால், அதிகாலை 2 மணிக்கு கழிப்பறையின் வாயிலில் தொடர் வண்டி போல மிகப்பெரிய வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. அதுவும் இரண்டு மணி நேரம் இந்த வரிசையில் காத்திருந்தால்தான், கழிப்பறைக்குள் நுழைய முடியும் என்ற நிலை.
ஒவ்வொரு வளாகத்திலும் பயன்படுத்தக்கூடிய அளவில் வெறும் 3 கழிப்பறைகளே மட்டும் இருக்கும் நிலையில், ஒவ்வொன்றிலும் 70 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறை வளாக வழிகாட்டுதல்படி, ஒவ்வொரு சிறைக் கைதியும் காலை 5.30 மணிக்கு எழுந்திரிக்க வேண்டும். அதுபோல, அனைத்திந்திய சிறைக் கைதிகளுக்கான ஆணைய வழிகாட்டுதல்படி, ஒரு சிறையில் 6 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை என்ற விகிதத்தில் அமைக்கப்பட வேண்டும். ஆனால், இது ஒன்றும் பயனில்லை என்பது போல, கழிப்பறை குறைவாக இருப்பதால் நள்ளிரவிலேயே கழிப்பறை வாசலில் கால் வலிக்கக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கடந்த ஜூலை மாதம், வேலூர் மத்திய சிறையிலிருந்து வெளியே வந்த ஒரு நபர், இது பற்றி எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு தெரிவித்த தகவலில், அனைவருமே அதிகாலையில் எழுந்து வரிசையில் நின்றுதான் கழிப்பறையை பயன்படுத்தி வருகிறார்கள் என்கிறார்.
நான் அதிகாலையிலேயே எழுந்து, கழிப்பறையை அடைந்தாலும், எனக்கு முன்பு 30 பேர் பல மணி நேரமாக கழிப்பறை வாசலில் காத்திருப்பதைப் பார்க்க முடியும். சரி. கழிப்பறை சுத்தமாக இருக்குமா என்றால் இருக்காது, அதிலும் அடிப்படை வசதிகள் கூட இருக்காது. எனவே, பல சிறைக் கைதிகளும் மிக விரைவாக உறங்கச் சென்றுவிடுவார்கள். அப்போதுதான் நள்ளிரவில் எழுந்து வரிசையில் நிற்க முடியும் என்கிறார்கள் சிறைக் கைதிகள்.