``திராவிடக் கட்சிகள் செய்த நல்ல காரியங்களை புறக்கணித்துவிட முடியாது” - சொல்கிறார் பா.ம.க கே.பாலு
``2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க-வின் கூட்டணி நிலைப்பாடென்ன.. `பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என மருத்துவர் ராமதாஸ் ட்வீட் செய்திருக்கிறாரே?”
`பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என மருத்துவர் ராமதாஸ் ட்வீட் செய்ததற்கும் தற்கால அரசியலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதேசமயம் 2026 சட்டமன்ற தேர்தலில் `எந்தக் கூட்டணியில் தொடர்கிறோம்` என்பதை தேர்தல் வருகின்றபோது பொதுக்குழு, செயற்குழு கூட்டப்பட்டு முறைப்படி ஆலோசித்து அறிவிப்போம். ஆனால் 2026-ல் தி.மு.க படுதோல்வி அடையப்போவதும் பா.ம.க இடம்பெற்றிருக்கும் கூட்டணி, கூட்டணி ஆட்சியை அமைப்பதும் உறுதி”
``கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் தமிழ்நாட்டில் இல்லை என்பதுதானே நிதர்சனம்?”
``ஒரு கட்சி தனியாக நின்று ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழலைக் கொண்டிருக்கும் அரசியல் களத்தில் கூட்டணி ஆட்சி மலராமல் இருப்பது ஏன்? அதிலென்ன தவறு? மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்போதும் அந்தக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளிப்பதில் என்ன சிக்கல்? ஆக, 2026-ல் அதிகாரப் பகிர்வு இல்லாமல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது”
``திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணியில் இடம்பெறுவதால் எந்தப் பயனுமில்லையென பா.ம.க உணர்ந்துவிட்டதால் பா.ஜ.க-வுடன்தான் கூட்டணி என அடித்துச் சொல்லாமல் தேர்தல் சமயத்தில் அறிவிப்போம் என்கிறீர்களா?”
``திராவிடக் கட்சிகளால் பதில் சொல்லாத முடியாத அளவுக்குப் பல்வேறு விமர்சனங்கள் அவர்கள்மீது இருக்கும் அதேவேளையில் திராவிட இயக்கங்கள் செய்த நல்ல காரியங்களை புறக்கணித்துவிட முடியாதே என்ற கேள்விகளும் எழுவது இயல்புதான். மீண்டும் சொல்கிறேன் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும்”
``சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்ற கருத்து நிலவும் சமயத்தில் தி.மு.க-வையே நீங்கள் சாடுவது ஏன்?”
``கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசுதான் என உங்களுக்குச் சொன்னது யார்... ‘மாநில அரசே சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடியும்’ என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில்தான், பீகார் அரசு தரவுகளை வெளியிட்டது. உச்ச நீதிமன்றமும் அதற்குத் தடைவிதிக்கவில்லை.
ஆனால், ‘கணக்கெடுப்பைவைத்து, பீகார் அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டின் அளவு முறையானதாக இல்லை’ என்றுதான் பாட்னா நீதிமன்றம் அதற்குத் தடைவிதித்தது. எனவே, மாநில அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் எந்தப் பிரச்னையுமில்லை. கலைஞர் இருந்திருந்தால் இப்படித்தான் சொல்லியிருப்பாரா.. தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இவ்வளவு மோசமாகிவிட்டதை எண்ணி வருந்துகிறேன். அதேசமயம் 69% இடஒதுக்கீட்டைக் காப்பதற்கும், உள் ஒதுக்கீடு வழங்குவதற்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே நடத்துவது மிக மிக அவசியம்.
``மஞ்சக் கொல்லை விவகாரத்தை சாதிய மோதலாக சித்தரித்து ஆதாயம் தேடுகிறது பா.ம.க என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே!”
``பா.ம.க-வை சாதிய வளையத்துக்குள் சுருக்கும் சதி முயற்சி நடப்பதை அறிந்து மஞ்சக் கொல்லை விவகாரத்தில் மிகக் கவனமாகச் செயல்பட்டது பா.ம.க தலைமை. மூர்க்கத்தனங்களை விடுத்து ஜனநாயக மற்றும் அரசியல்பூர்வமாக செயல்பட்டதனால்தான் வன்முறையைத் தூண்டிய தன்கட்சியினரை நீக்கும் நிர்பந்தம் திருமாவளவனுக்கு ஏற்பட்டது. அந்தக் கட்சியினர்தான் மஞ்சக்கொல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தி `கழுத்தறுப்போம்... தலையறுப்போம்’ எனப் பேசினர். இவற்றையெல்லாம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டிய தி.மு.க அரசு வன்னியர், பட்டியல் சமூக மோதலால் ஏற்படும் நெருப்பில் குளிர்காய்கிறார்கள். வி.சி.க-வும் காவல்துறையும் அரசும் இணைந்து அராஜமாக செயல்பட்டதை எவராலும் மறுக்க முடியாது”