Manipur: 6 பேர் கொலை; அதிகரிக்கும் வன்முறை... NIA விசாரணைக்கு உள்துறை உத்தரவு..! என்ன நடக்கிறது?
கடந்த திங்கட்கிழமை (11.11.2024) அன்று மணிப்பூரின் ஜிப்ராம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமில் இருந்த மூன்று குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உள்பட ஆறு பேர் கலவரக்காரர்களால் கடத்தப்பட்டனர்.
அவ்வாறு கடத்தப்பட்டதில் ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளின் உடல்கள் மணிப்பூர், அஸ்ஸாம் எல்லையில் ஜிரி மற்றும் பராக் நதிகள் சந்திக்கும் இடத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக் கிழமை இரவு முதல் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பதற்றம் நிலவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மணிப்பூர் அரசு விடுமுறை அறிவித்தது. மேலும் மெய்தி இன பெண்கள் தலைமையிலான போராட்டக்காரர்கள் சனிக்கிழமை காலை, பள்ளத்தாக்கு முழுவதும் சாலைகளை மறித்தும், டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அஸ்ஸாம் - மணிப்பூர் எல்லையில் மேலும் மூன்று உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானதும் நிலைமை மிக மோசமானது. சனிக்கிழமை மாலை பல்வேறு இடங்களிலும் கலவரம் வெடித்தன.
ஆறு பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இம்பாலில் போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி வாகனங்களும் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை இரவு, இம்பாலின் புறநகர் பகுதியில் உள்ள ஆளும் பாஜக அரசின் முதல்வர் பிரன்சிங் வீட்டில் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாக சனிக்கிழமை மதியம், முதல்வரின் மருமகனும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.கே.இமோவின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி, குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
மேலும், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வீடுகளையும் போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். 'பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றவர்களை தண்டிக்காவிட்டால் பதவி விலகுங்கள்' என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்துகிழக்கு மற்றும் மேற்கு இம்பால், பிஷ்ணுபூர் போன்ற இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மெய்தி இன மக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஏழு மாவட்டங்களில் இணைய மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளை மணிப்பூர் அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஜிரிபாம் மாவட்டம் முழுவதும் வன்முறை பரவி, குறைந்தது 5 தேவாலயங்கள் உள்பட பல கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இந்த ஆறு பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அஸ்ஸாமின் சில்சார் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பள்ளத்தாக்கு பகுதிகளில் வன்முறை மற்றும் போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், "அமைதி மற்றும் அமைதியை நிலை நாட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, மணிப்பூரில் கடந்த சில நாள்களாக பாதுகாப்பு சூழல் பலவீனமாக உள்ளது" என கூறியுள்ளது.
வன்முறை மற்றும் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் எவருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலைமையை கருத்தில் கொண்டு, முக்கிய வழக்குகள் விசாரணை என்.ஐ.ஏ விடம் ஒப்படைக்கப்படும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அமைதியை பேணுமாறும், சட்ட ஒழுங்கு நிலைநாட்ட பாதுகாப்பு படையினருக்கு உதவுமாறும்' மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 7 முதல் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒன்றைத் தவிர, மற்ற அனைத்தும் இறப்புகளும் ஜிரிபாவில் பதிவாகியுள்ளன.
மே -3, 2023 அன்று தொடங்கிய மெய்தி மற்றும் குக்கி மக்களிடையேயான இன மோதலின் ஒரு வருடம் கழித்து இந்த ஜூன் மாதத்தில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னதாக இம்பாலில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, "நவம்பர் 11 அன்று கடத்தப்பட்ட ஆறு பேரில் மூன்று பேர் அதே நாளில் கொல்லப்பட்டிருக்கலாம், மேலும் நாங்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளோம். பெண்ணின் கணவர், ஒரு போலீஸ்காரர் உடலை அடையாளம் காண்பதற்காக நவம்பர் 17ஆம் தேதி மருத்துவமனைக்கு செல்வதற்கான வாய்ப்புள்ளது" எனக் கூறியுள்ளார்.
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb