வயநாடு : `மத்திய அரசின் அறிவிப்பு மனிதாபிமானமற்ற செயல்' - கேரள வருவாய்த் துறை அமைச்சர் ராஜு
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30-ம் தேதி சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன், ``வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும். வீடுகளை இழந்த பொது மக்களுக்கு இழப்பீடு வழங்க புனரமைப்பு திட்டங்களுக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும். ஒரு ஒட்டுமொத்த கிராமமே நிலச்சரிவில் அழிந்தது கேரள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது." என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் எந்த தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக பதில் கடிதம் எழுதியிருக்கும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய், ``முண்டக்கை மற்றும் சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. சூழ்நிலையை சமாளிப்பதற்கு தேவையான நிதி, கேரளா மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் அதிகமாக உள்ளது. பேரிடரை நிர்வகிப்பதற்கான ஆரம்ப பொறுப்பு மாநில அரசிடமே உள்ளது. மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிய நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், மற்ற செலவுகளையும் மாநில அரசு செய்ய வேண்டும். ஏற்கெனவே பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.388 கோடி இரண்டு தவணைகளாக கேரள அரசுக்கு வழங்கி உள்ளோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.
மத்திய அரசின் இந்த பதில் தொடர்பாக பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு மக்களவை இடைத்தேர்தல் வேட்பாளருமான பிரியங்கா காந்தி, "பிரதமர் மோடி வயநாடு நிலச்சரிவு நடந்த பிறகு அங்கு சென்று அதன் விளைவுகளை நேரில் பார்த்தார். ஆனாலும் அவரது அரசு அரசியல் செய்து முக்கிய உதவிகளை நிறுத்துகிறது. கற்பனை செய்ய முடியாத இழப்பை சந்தித்தவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கும் அநீதி" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய அரசின் இந்த பதில் குறித்துப் பேசிய கேரள வருவாய்த் துறை அமைச்சர் ராஜு, ``மத்திய அரசின் இந்த அறிவிப்பு மனிதாபிமானமற்ற செயல். வயநாடு விபத்தை அதி தீவிர விபத்து என்று எல்-3 பிரிவில் கூட சேர்க்க மறுக்கிறது. கேரள மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், ``வயநாட்டிற்கு பிறகு மழை, புயல், பாதிப்பு ஏற்பட்ட ஆந்திராவுக்கும், பீகாருக்கும் சிறப்பு நிதி வழங்கிய மத்திய அரசு, கேரளாவிற்கு ஏன் நிதி வழங்கவில்லை. அரசின் இந்த புறக்கணிப்பிற்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.