மேற்கு வங்கம்: மாணவர்களின் ரூ. 1.9 கோடி திருட்டு!
மேற்கு வங்கத்தில் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1.9 கோடி திருடப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இடையேயான டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்காக, 2020 ஆம் ஆண்டின் இறுதியில் தருனர் ஸ்வப்னோ திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 10,000 (ஒருமுறை மானியமாக) வழங்கப்படும்.
இதன்மூலம், மாணவர்கள் ஸ்மார்ட்போன், டேப்லேட் வாங்க இயலும். 2024 - 25 நிதியாண்டிலும், இந்த திட்டத்திற்காக சுமார் ரூ. 900 கோடியை மேற்கு வங்க அரசு ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில், தருனர் ஸ்வப்னோ திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் மானியத் தொகை, மாணவர்களின் வங்கிக் கணக்குச் செல்லாமல், வெளிமாநிலத்தில் உள்ள வங்கிக் கணக்குகளுக்குச் செல்வதாக புகார் எழுந்தது.
இதையும் படிக்க:அமெரிக்க அரசு செயல்திறன் துறையில் வேலைவாய்ப்பு: எலான் மஸ்க்
இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. விசாரணையில், 1,900 மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் மானியம் பெறப்படாமல் இருப்பது தெரிய வந்தது.
மேலும், வெளிமாநிலத்தில் உள்ள வங்கிக் கணக்குகளிலும், சில மாணவர்கள் இருப்பிடத்திற்கு தொலைவில் வேறு கணக்கிலும் பணம் செலுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. தருனர் ஸ்வப்னோ திட்டத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ``இந்த மோசடியின் பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்படுவார்கள்’’ என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசு கூறியுள்ளார். இந்த புகாரில் நடவடிக்கை எடுக்க தேசிய தகவல் மையத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.