ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய வரலாற்றில் முதல்முறை
எதற்கு இத்தனை எதிர்மறை விமர்சனங்கள்? கங்குவாவைப் புகழ்ந்த ஜோதிகா!
நடிகை ஜோதிகா கங்குவா திரைப்படம் குறித்து எழுதிய பதிவு வைரலாகி வருகிறது.
கங்குவா திரைப்படம் கடந்த வியாழக்கிழமை அன்று உலகளவில் பிரம்மாண்டமாக வெளியானது. 10000க்கும் அதிகமான திரைகளில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. படத்தின் டிரைலர் மற்றும் புரமோஷன்களால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உருவானது.
ஆனால், படத்தின் கதை, திரைக்கதை பலவீனமாகவும், பின்னணி இசை மற்றும் வசனங்கள் இரைச்சல் மிகுந்ததாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதனால், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக வெற்றியைப் பெறுவதற்காகத் தடுமாறி வருகிறது. அனைத்து மொழிகளிலும் படத்திற்கு எதிராக அதிகமான விமர்சனங்கள் வருவதால் தயாரிப்பு நிறுவனம் அதிருப்தியடைந்துள்ளது.
இதையும் படிக்க: ரூ. 100 கோடியை நெருங்கும் கங்குவா வசூல்!
இந்த நிலையில், நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் கங்குவா குறித்த பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்தக் குறிப்பை ஜோதிகாவாகவும் சினிமா விரும்பியாகவும் பதிவு செய்கிறேன். சூர்யாவின் மனைவியாக அல்ல. கங்குவா அற்புதமான படம். சினிமாவை முன்நகர்த்தவதற்கான கனவைக் கொண்ட நடிகராக சூர்யாவை நினைத்து பெருமைப்படுகிறேன். நிச்சயமாக, முதல் அரை மணி நேரம் ஒலியமைப்பு இரைச்சலாக இருந்தது.
பல இந்திய திரைப்படங்களில் குறைபாடுகள் உண்டு என்றாலும் இந்த மாதிரியான பெரிய பரிசோதனை படங்களில் அரை மணி நேரம் என்பது நியாயமானதாகவும் தெரிகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கங்குவா மிகச்சிறந்த சினிமா அனுபவம். இதற்கு முன் தமிழ் சினிமாவில் இப்படியொரு ஒளிப்பதிவைக் கண்டதில்லை. ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமிக்கு சல்யூட்.
சமூக வலைதளங்களில் படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களைக் கண்டபோது ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன் புரிதல் இல்லாமல் எடுக்கப்பட்ட மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களில்கூட பெண்களை பின்தொடர்வது, இரட்டை அர்த்தங்களில் பேசுவது, அதிகப்படியான சண்டைக்காட்சிகளென இருந்தன. கங்குவாவின் நேர்மறையான விஷயங்கள் என்ன? இரண்டாம் பாதியில் பெண்களின் சண்டைக்காட்சியும், சிறுவன் கங்குவாவை நேசிப்பதும் வெறுப்பதும்.... விமர்சிப்பவர்கள் படத்தின் நல்ல பகுதிகளை மறந்துவிட்டனர் என நான் நினைக்கிறேன்.
படத்தின் முதல் காட்சி முடிவதற்குள்ளாகவே இப்படியொரு படத்தை எடுப்பதற்கான எண்ணத்திற்கும் தனித்துவமிக்க 3டி அனுபவத்திற்காகவும் பாராட்டுகளைப் பெற்றிருக்க வேண்டிய நிலையில், பலர் இவ்வளவு எதிர்மறையான விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்தது வருத்தமளிக்கிறது. (இது குழு பிரச்சாரம் போல் தெரிகிறது)
கங்குவா குழுவினர் பெருமையாக இருங்கள். எதிர்மறையான கருத்தை தெரிவிப்பவர்கள் சினிமாவின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை.” என அதிரடியாகத் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
ஜோதிகாவின் இப்பதிவை பலரும் பாராட்டுவதுடன் வைரலாக்கியும் வருகின்றனர்!