மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
Pa.Ranjith: "2026 தேர்தலில் களமிறங்குவோம்; நாம யாருன்னு காட்டுவோம்..." - இயக்குநர் பா.ரஞ்சித்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் உள்ள வீட்டின் அருகே ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்ட விவகாரம் சென்னையை உலுக்கியது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள செம்பியம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல மர்மங்களும், உண்மைகளும் இந்த வழக்கு விசாரணை வெளியில் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று (நவம்பர் 16) ஆம்ஸ்ட்ராங் பற்றிய 'காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்' என்னும் நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இவ்விழாவில் பேசிய இயக்குநர் ரஞ்சித், 2026 தேர்தலில் திருமதி ஆம்ஸ்ட்ராங் அவர்களை திருவள்ளூர் தொகுதியில் நிற்க வைத்து வெற்றிபெற வைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித், "ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் பல உண்மைகள் மறைந்திருக்கின்றன. அதை வெளியில் கொண்டுவர வேண்டிய தேவையிருக்கிறது. இரண்டு ரவுடி கும்பல்களின் மோதல்கள் என்று பலர் கூறுகிறார்கள். அது உண்மையில்லை ஆம்ஸ்ட்ராங் எப்படிப்பட்ட தலைவர் என்பதை எல்லோருக்கும் சொல்ல வேண்டிய தேவையிருக்கிறது.
இந்த விவகாரத்தில் தி.மு.க அரசை கடுமையாகக் கண்டித்து கேள்விகளை எழுப்புவதாகப் பலரும் கூறுகின்றனர். தி.மு.க - அ.தி.மு.க என எந்த அரசாக இருந்தாலும் எங்கள் உரிமைகளை, கேள்விகளை நாங்கள் பயமின்றி கேட்போம்.
இங்கு 'பகுஜன் சமாஜ் கட்சி' தோழர்கள் நிறையபேர் இருக்கீங்க. ஒரு தெளிவான திட்டத்துடன் நாம் 2026 தேர்தல் களத்தில் இறங்க வேண்டும். திருமதி. ஆம்ஸ்ட்ராங் அவர்களை திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தி, அவர்களை வெற்றிபெற வைக்க நாம் எல்லோரும் சேர்ந்து தேர்தல் களத்தில் உழைக்க வேண்டும். தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். நாம யாருன்னு காட்டணும். ஆம்ஸ்ட்ராங் எப்படிப்பட்ட தலைவர் என்று எல்லோருக்கும் சொல்ல வேண்டும். அரசியல் அதிகாரத்தைப் பெறுவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். அதுதான் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும். களத்தில் இறங்கி வேலை செய்ய நான் தயார். ஜெயிக்கிறோமோ - தோல்வியடைகிறோமோ அது முக்கியமில்லை. சண்டை செய்யணும் அதுதான் முக்கியம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். வட தமிழகத்தில் தனித்து நின்று வெற்றி பெற்ற வரலாறு நமக்கு உண்டு. அதை மீண்டும் நிரூபித்துக் காட்டுவோம்"என்று பேசியிருக்கிறார்.