மன்னார்குடி: பரிதாமாக உயிரிழந்த மருமகள்; கணவரை தாக்கிய திமுக பிரமுகர் கைது... பின்னணி என்ன?
குடும்பத்தில் பிரச்னை..
மன்னார்குடி அருணா நகரைச் சேர்ந்தவர் ஆர்.வி.ஆனந்த். இவர் மன்னார்குடி வர்த்தக சங்க தலைவராகவும், தி.மு.கவில் திருவாரூர் மாவட்ட அயலக அணி அமைப்பாளராகவும் இருக்கிறார்.
இவரது சகோதரி மகள் கவிதா (35) உள்ளிக்கோட்டை அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக பணி புரிந்தார். இவரது தந்தை ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ சந்திரசேகரன்.
வேதாரண்யம் அருகே உள்ள துளசியாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரனுக்கும் கவிதாவிற்கும் திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன், 9 வயதில் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மகேந்திரன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். கவிதா, அசேஷம் பகுதியில் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். மகேந்திரன், கவிதா மேல் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டைப் போட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்க குடும்பத்தினர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும் மகேந்திரன் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்கிறார்கள்.
உயிரிழந்த கவிதா
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மகேந்திரன் சிங்கப்பூரிலிருந்து மன்னார்குடி வந்துள்ளார். அத்துடன் வழக்கம் போல் கவிதாவை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து நேற்று மதியம் கவிதா, தன் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு சென்றுள்ளனர். கவிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைதொடர்ந்து கவிதா குடும்பத்தினர் கதறியுள்ளனர்.
மருத்துவமனையில் சண்டை..
இந்த நிலையில் கவிதாவின் தாய்மாமன் ஆர்.வி.ஆனந்த் மருத்துவமனைக்கு வந்துள்ளார். சந்தேகப் பேர்வழிக்கிட்ட பெண்ணை கொடுத்துட்டோம், அவன்கிட்ட இருந்து பல கஷ்டங்களை அனுபவித்தவள் இப்ப நம்மளை தவிக்க விட்டுட்டு போயிட்டாள்னு கலங்கியிருக்கிறார். இந்த நிலையில் அங்கு மகேந்திரன் வர அவரை பார்த்த ஆர்.வி.ஆனந்த்தும் அவர்களது உறவினர்கள் சிலரும் சேர்ந்து மகேந்திரனை தாக்கியுள்ளனர். இதை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீஸ் ஒருவர் வீடியோ எடுத்ததாக சொல்லப்படுகிறது.
ஆர்.வி.ஆனந்த் மீது வழக்குப்பதிவு
இதையடுத்து, ஆர்.வி.ஆனந்த் பெண் போலீஸின் செல்போனை தட்டி விட்டுள்ளார். அப்போது போலீஸ் ஏய் என்றதாக சொல்லப்படுகிறது. என்ன ஏய் என்கிறாய்னு கேட்டு ஆர்.வி.ஆனந்த் பெண் போலீஸை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்ற மன்னார்குடி டி.எஸ்.பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ், விசாரணைக்காக ஆர்.வி.ஆனந்தை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் மீது பெண் போலீஸை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
ஆர்.வி.ஆனந்த் வர்த்தக சங்கத்தில் தலைவராக இருப்பதால் இதையறிந்த வர்த்தகர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டனர். அத்துடன் ஆர்.வி.ஆனந்தை வெளியே விடவில்லை என்றால் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். இதனால் மன்னார்குடியில் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் ஆர்.வி.ஆனந்தை ஸ்டேஷன் பெயிலில் வெளியே அனுப்பினர். இந்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடந்தது என்ன?
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறுகையில், "ஆர்.வி.ஆனந்த் தாக்குவதை வீடியோ எடுத்த பெண் போலீஸ் கர்ப்பிணி. பாதுகாப்புக்கு சென்ற இடத்தில் மோதல் நடக்கும் போது அதை ரெக்கார்டுக்காக வீடியோ எடுப்பது வழக்கமான ஒன்று. அதை தான் அந்த பெண் போலீஸும் செய்தார். இதைபார்த்த ஆர்.வி.ஆனந்த் வீடியோ எடுப்பதை தடுத்ததுடன் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டார். அதனால் அவரை டி.எஸ்.பி கைது செய்தார்" என்றனர்.
இது குறித்து ஆர்.வி.ஆனந்த் தரப்பு கூறுகையில், "கவிதாவின் பின் தலையில் காயம் இருக்கிறது. தூக்கில் தொங்கியிருந்தாலும் அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அவரது இறப்புக்கு மகேந்திரன் தான் காரணம். இந்த சூழலில் கவிதா இறப்பை தாங்க முடியாமல் ஆர்.வி.ஆனந்த் கதறி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த மகேந்திரனை ஆத்திரத்தில் தாக்கினர். இதை பெண் போலீஸ் வீடியோ எடுக்க அதை தடுத்தார் தாக்கவில்லை. இதை அந்த பெண் போலீஸும் உணர்ந்து கொண்டார். இந்த நிலையில் கடந்த வருடம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது நடந்த சில நிகழ்வுகளால் ஆர்.வி.ஆனந்த் மீது டி.எஸ்.பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் காழ்ப்புணர்ச்சியில் இருந்தார். இந்த நிலையில் பெண் போலீஸிடம் பொய்யான வாக்குறுதியை பெற்று கைது செய்தார். தொடர்ந்து இது போல் செயல்படும் டி.எஸ்.பி மீது வழக்கு தொடருவோம்" என தெரிவித்தனர்.