சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கும் கீழே முடிந்தது; ட...
UP: நெடுஞ்சாலை பணிகள் நடந்த இடத்தில் மண் சரிவு - 10 வயது குழந்தை உட்பட 4 பெண்கள் பலியான சோகம்!
உத்தரப்பிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் திடீரென மண் குன்று சரிந்ததில் குறைந்தது 4 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பெண்கள் தங்கள் வீடுகளை சீரமைக்க மண் எடுத்துச் சென்றபோது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மண்ணுக்குள் புதையுண்டனர்.
கஸ்கஞ்ச் மாவட்ட மாஜிஸ்திரேட் மேதா ரூபம், இதுவரை 9 பெண்கள் மண் சரிவிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் அதில் 4 பேர் மரணமடைந்துள்ளனர் மற்றும் 5 பேர் மருத்துவமனையில் சேர்கப்ப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். உயிரிழந்த நால்வரில் 10 வயது பெண் குழந்தையும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
"மீட்பு பணிகள் முறையாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நாங்கள் ஜேசிபி மற்றும் தோண்டும் கருவிகள் உதவியுடன் இந்த சுற்றுவட்டாரம் முழுவதையும் ஆராய்ந்து வருகிறோம். வேறு பெண்கள் யாரும் புதைந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான். இங்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெற்று வந்திருக்கின்றன." என்றார் மேதா ரூபம்.
மேலும், "இந்த விபத்துக்கு யாருடைய அலட்சியம் காரணமாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பெண்கள் வீட்டு தேவைகளுக்காக மண் எடுக்க வந்ததாகக் கூறப்படுகிறது. உயிர் பிழைத்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும்." எனக் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இது ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வு என்று கூறியுள்ளார். மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.