MANIPUR: மணிப்பூரில் மீண்டும் வன்முறைத் `தீ'... உலக அரங்கில் சரிகிறதா `மோடி' பிம...
போலி பணி ஆணை; ரூ.99 லட்சம் மோசடி... கைதான ஊராட்சி மன்றத் தலைவி - காங்கிரஸில் சலசலப்பு!
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே அமைந்துள்ளது கொல்லஞ்சி ஊராட்சி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சலோமி இந்த ஊராட்சி மன்ற தலைவியாக இருந்துவருகிறார். இவர் மகிளா காங்கிரஸ் நிர்வாகியாகவும் உள்ளார். மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணி பெற்றுகொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து பணம் பெற்றுள்ளார். மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மூலம் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ருபாய் பெற்றதுடன் போலியாக பணி உத்தரவு ஆணைகளை தயாரித்து இளைஞர்களுக்கு கொடுத்து ஏமாற்றி உள்ளார். இதற்கு சலோமியின் கணவர் சோபிதஸ், தோழி நடைக்காவு பகுதியை சேர்ந்த சிந்து உட்பட பலரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது சம்பந்தமாக பணம் கொடுத்து ஏமாந்த இளைஞர்களின் பெற்றோர் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் அளித்தனர்.
மார்த்தாண்டம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவி சலோமி மற்றும் குடும்பத்தினரும் தலைமறைவாக இருந்து வந்தனர். இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கொல்லஞ்சி ஊராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தலைமதைவாக இருந்த சலோமி-யை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
சலோமியின் கணவர் சோபிதாஸ் மற்றும் அவரது தோழி நடைக்காவு பகுதியை சேர்ந்த சிந்து ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். சலோமி ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பதால் அவரை மட்டும் போலீஸார் ஜாமீனில் விடுவித்தனர். மற்ற இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில்.கூறுகையில், "சலோமி அவரது தோழி சிந்து (47) என்பவர் மூலம் இந்திய ரயில்வே மற்றும் ஃபுட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 8 நபர்களிடம் ரூ. 99 லட்சம் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. அந்த பணத்தை சலோமியின் தோழி சிந்துவிடம் நேரடியாகவும், சிந்துவின் கணவர் சுரேஷ் (51), ரேஷ்மா (25), அகத்தியன், சந்திரமோகன் (55), இம்மானுவேல் ஆகியோர்களின் வங்கி கணக்குகளுக்கும் பாதிக்கப்பட்ட நபர்கள் அனுப்பி உள்ளனர். அதுமட்டுமல்லாது வேலைக்கான போலியான உத்தரவு வழங்கி பயிற்சி வழங்குவதாக கூறி டெல்லி உட்பட வடமாநிலங்களுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்ததாகவும் புகார்தாரர்கள் கூறியுள்ளனர். தற்போது நட்டாலத்தைச் சேர்ந்த அருண் (32), என்பவர் 22.01.2021-ல் பணம் கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவி சலோமி மற்றும் அவரது கணவர் சோபிதாஸ் உட்பட 8 பேர் மீது மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சலோமி அக்கட்சி எம்.பி-விஜய் வசந்த் பெயரைச் சொல்லி மோசடி செய்து போலி பணியாணை வழங்கியிருக்கிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பூதாகரமான பிரச்னையாக வெடித்துள்ளது. எனவே கட்சி ரீதியாகவும் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த விவகாரம் காங்கிரஸ் தலைமைக்கு தலைவலியாக மாறியுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் கூறுகையில், "சலோமி மீது புகார் எழுந்ததும் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர் கொடுத்த விளக்கத்தை மாநில தலைமைக்கு அனுப்பியுள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாநில தலைமை முடிவு செய்யும்" என்றார் சுருக்கமாக.