கோத்ரா ரயில் எரிப்பு படத்துக்கு பெருகும் ஆதரவு..! உ.பி. முதல்வரை சந்தித்த நடிகர்...
'தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பேன்..!' - சரண்டரான தளவாய்... எடப்பாடி மனம்மாறிய பின்னணி
அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம், குமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் குமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன்காரணமாக அவரின் கட்சி பொறுப்புகள் அனைத்தையும் பறித்தார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், அவரின் பொறுப்புகளை அவருக்கே கொடுத்திருக்கிறார் எடப்பாடி.
இதன் பின்னணி குறித்து அதிமுக சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் பேசும்போது, "தளவாய் சுந்தரத்தின் கட்சி பொறுப்புகளை பறித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்துவிட்டது. பதவி பறிப்பால் கடும் அதிருப்தியில் இருந்த தளவாய், இதுகுறித்து தலைமையிடம் விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை; தலைமையும் கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே, பா.ஜ.க-வில் இருந்தும் தளவாய்க்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால், பா.ஜ.க-வுக்கு சென்றால், விஜயதரணி நிலைமைதான் தனக்கும் வருமென்று உணர்ந்த தளவாய் அதிமுகவிலேயே இருக்க திட்டமிட்டார்.
அதன்படிதான், தலைமை சந்தித்து விளக்கமளிக்க விரும்பிய தளவாய்க்கு நேரம் வழங்கப்படவே இல்லை. பதவி பறிப்பு அதிருப்தியில் இருந்த தளவாய், எடப்பாடிமீது நெருக்கமானவர்களிடம் கடுமையாக பேசியதே அதற்கு காரணம். போதாக்குறைக்கு குமரியில் அதிமுகவை டெபாசிட் கூட வாங்க வைக்க முடியாத அவர், அதிமுகவின் தென்னகத்து பொதுச் செயலாளர்' என்றயெல்லாம் தனது அனுதாபிகளை வைத்து செய்திகளை பரப்பி இருந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சரும் கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசனைச் சந்தித்து, ‘ஊரில் மற்ற மத நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதுபோலத்தான் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்தேன்.
அதை, தவறாகப் புரிந்துகொண்டது தலைமை. ஆனால், என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தலைமை முடிவு எடுத்துவிட்டது. நான் சாகும் வரை அதிமுகவில்தான் இருப்பேன். எடப்பாடியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பேன்...’ என சரண்டர் ஆகிவிட்டார்.
இதையடுத்து அவரை தேற்றிய சீனிவாசன் தளவாயின் விளக்கத்தை தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
இதையடுத்து அவரது விளக்கத்தையும், மன்னிப்பு கடிதத்தை வாங்கிக்கொண்ட தலைமை மனம் மாறியது. அதன்படி அவருக்கு மீண்டும் பொறுப்புகளை வழங்கியிருக்கிறது. இதற்கிடையே, தளவாய் இடத்தை நிரப்ப குமரி அதிமுகவுக்குள் பெரும் கோஷ்டி சண்டையே நடந்துவந்தது. 'என்னதான் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும், தளவாய் பாஜகவுக்குதான் விசுவாசமாக இருப்பார். இது தெரியாமல் தலைமை தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்கிவிட்டது' என்று அந்த நிர்வாகிகள் தலைமையின்மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். விரைவிலேயே குமரி அதிமுகவுக்குள் நடக்கும் பனிப்போர் வீதிக்கு வந்துவிடும்." என்றனர் விரிவாக.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...