தில்லி: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த செயற்கை மழை.! மத்திய அரசிடம் கோரிக்கை
தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் செயற்கை மழைப்பொழிவை உண்டாக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
புதுதில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இன்று(நவ. 19) காலை 8 மணி நிலவரப்படி, தில்லியில் காற்று தரக் குறியீடு 488-ஆக, 'மிகத் தீவிரம்’ என்ற பிரிவில் பதிவாகியிருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தில்லியின் பெரும்பாலான இடங்களிலும், அடர்த்தியான புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. மாசடைந்துள்ள காற்றை வெறும் 1 மணி நேரம் சுவாசித்தால் போதும், நுரையீரலில் கடும் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர் மருத்துவ நிபுணர்கள். இந்த நிலையில், செயற்கை மழைக்கு அனுமதியளிக்க மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
செயற்கை மழை திட்டம் குறித்து தில்லி சுற்றுச்சுழல் அமைச்சர் கோபால் ராய் இன்று(நவ. 19) செய்தியாளர்களுடன் பேசியதாவது, “தில்லியில் செயற்கை மழை பெய்ய அனுமதிக்க வேண்டுமென்ற தில்லி அரசின் தொடர் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிமடுக்கவில்லை. இவ்விவகாரத்தில் மத்திய அரசிடம் அனுமதி கோரி, மீண்டும் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும், இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு விரைந்து தீர்வு காணவும்” அவர் வலியுறுத்தியுள்ளார்.