மகாராஷ்டிரா: பிரசாரம் ஓய்ந்தது... நாளை வாக்குப்பதிவு; மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு..!
அனல் பறக்கும் பிரசாரம்..
மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பிரசாரமும் அனல் பறக்கும் வகையில் இருந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பிரசாரம் செய்த ராகுல் காந்தி தாராவி, அதானி, அரசியலமைப்பு சட்டம் போன்றவற்றை பிரதானப்படுத்தி பிரசாரம் செய்தார்.
வழக்கமாக கடைசி நாள் வரை பிரசாரம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி இம்முறை இரண்டு நாள்களுக்கு முன்பே தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே, அஜித்பவார், சரத்பவார் ஆகியோரின் பிரசாரம் மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் வகையில் இருந்தது.
காங்கிரஸ் இம்முறை அதிக அளவில் விதர்பாவில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது. சரத்பவாரும் தனக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் மேற்கு மற்றும் வடக்கு மகாராஷ்டிராவில் தீவிர கவனம் செலுத்தினார்.
தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று சரத்பவார் மற்றும் அஜித்பவார் ஆகியோர் தங்களது சொந்த ஊரான பாராமதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை நடத்தினர். இதில் கலந்து கொண்டு சரத்பவார் பேசுகையில்,'' நான் அஜித்பவாரின் பணிகளை குறை சொல்லவில்லை. பாராமதிக்கு புதிய இளம் தலைமுறை தலைவர் தேவை. அதற்கு யுகேந்திர பவார் சரியான தேர்வாக இருப்பார்''என்று தெரிவித்தார்.
கடுமையான போட்டி
மற்றொருபுறம் சரத்பவார் தேர்தல் பிரசாரம் நடத்திய இடத்தில் இருந்து சற்று தள்ளி அஜித்பவாரும் இறுதி தேர்தல் பிரசாரம் கூட்டத்தை நடத்தினார். இதில் அஜித்பவாரின் தாயார், சகோதரிகள், மகன்கள் என ஒட்டுமொத்த குடும்பமே கலந்து கொண்டனர்.
இதில் பேசிய அஜித்பவார் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். மக்களவைத் தேர்தலில் நான் தனியாக நின்றேன். இப்போது எனது குடும்பம் இருக்கிறது. பாராமதி மக்களோடு நான் மிகவும் நெருக்கமானவன். எனவே அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச்செய்தால் அதிக நிதியை கொண்டு வருவேன் என்று பேசினார். இத்தேர்தல் இரண்டு சிவசேனாக்கள், இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. இதனால் தேர்தல் பிரசாரம் மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் வகையில் இருந்தது.
மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
பெரும்பாலான வேட்பாளர்கள் கடைசி நாளில் வாகன பேரணி நடத்தி தங்களது செல்வாக்கை தொகுதி மக்களுக்கு காட்டினர். இதில் இரண்டு சிவசேனாக்களும் 46 தொகுதியில் நேருக்கு நேர் மோதுகின்றன. இதேபோன்று இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் 37 தொகுதியில் நேருக்கு நேராக மோதுகின்றன. பிரதான போட்டியாக இருப்பது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையில் இருக்கிறது. இரு கட்சிகளும் 76 தொகுதியில் நேருக்கு நேர் மோதுகின்றன. 38 தொகுதியில் பாரதீய ஜனதாவும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. இத்தேர்தலில் போட்டி கடுமையாக இருப்பதால் தேர்தல் நேரத்தில் வன்முறைக்கு வாய்ப்பு இருப்பதால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வெளிமாநிலத்தில் இருந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது பணம், மது, இலவச பொருட்கள் என மொத்தம் ரூ.350 கோடி மதிப்பிலான பொருட்களை தேர்தல் பார்வையாளர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்
மகாராஷ்டிராவில் மொத்தம் 9.6 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். மொத்தமுள்ள 288 தொகுதியில் 4136 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடைசி நாளில் காங்கிரஸ் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அதில் பேசிய ராகுல் காந்தி,''மஹாயுதி அரசு ஒரு லட்சம் கோடி மதிப்பிலான தாராவி நிலத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறது. எந்த வித பிரச்னையும் இல்லாதல் நிலத்தை அதானிக்கு கொடுக்க ஒட்டுமொத்த அரசாங்கமும் வேலை செய்துள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலை ஒரு கோடீஸ்வரனுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான தேர்தலாகவே நான் கருதுகிறேன். பா.ஜ.கவினரின் ஒன்று இருந்தால் பாதுகாப்பு என்ற கோஷம் அதானி-மோடியையே குறிக்கும்''என்று தெரிவித்தார்.
அதோடு ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்புக்கு பாதுகாப்பு பெட்டகம் ஒன்றை எடுத்து வந்தார். அதில் அதானி மற்றும் மோடி புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அதாவது ஒன்று இருந்தால் அனைவருக்கும் பாதுகாப்பு என்று பா.ஜ.கவினர் சொன்னதை குறிக்கும் வகையில் இருவரது புகைப்படத்தையும் பாதுகாப்பு பெட்டகத்தில் ஒட்டிக்கொண்டு வந்திருந்தார்.
தேர்தலுக்கு விளம்பரம் கொடுப்பதிலும் பா.ஜ.க மற்றும் சிவசேனா(மஹாயுதி) கூட்டணி பணத்தை கோடிக்கணக்கில் வாரி இறைத்தது. தினமும் பத்திரிகைகளில் பல முழு பக்க விளம்பரம் கொடுத்தது. இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் மிகவும் மோசமாக யாரும் எதிர்பாராத வகையில் கீழ்த்தரமாக இருந்தது என்று மராத்தி நடிகர் அதுல் குல்கர்னி விமர்சனம் செய்துள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...