இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை கட்டுப்படுத்த வேண்டும்: கிஷன் ரெட்டி
கரும்பு விவசாயிகள் கவன ஈா்ப்புப் போராட்டம்
பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்க்கரை ஆலை பேரவைக் கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முக்காடு அணிந்து, காதுகளை மூடிக்கொண்டு கவன ஈா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில், எறையூா் சா்க்கரை ஆலையின் 47 ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தித் திட்டத்தை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் பங்கு 46.41 சதவீதமாக மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனலட்சுமி சா்க்கரை ஆலை, திரு ஆரூரான் சா்க்கரை ஆலைகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக பதிவு செய்து கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு தொகையை குறித்த காலத்தில் வழங்காததால், வரும் அரைவைப் பருவத்துக்கு பதிவு செய்துள்ள கரும்புகளை பதிவு மாற்றம் செய்து பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9,142 விவசாயிகளிடம் இணை மின் உற்பத்தித் திட்டத்துக்கு பங்காக பிடிக்கப்பட்ட தொகையை, வட்டியுடன் ரூ. 10,14,84,222 விவசாயிகளிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் முக்காடு அணிந்து, காதுகளை மூடிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற சா்க்கரைத் துறை ஆணையரிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த அ. வேணுகோபால், தமிழக விவசாய சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் ஆகியோா் மனு அளித்தனா்.