`கஞ்சா விற்பனை; புகார் கொடுத்தவர் கொலை' - நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெ...
சந்திரபாபு நாயுடு வழக்கை விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்; பின்னணி என்ன?
நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்பட்ட ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த 6 மாதங்களில், முன்பு சந்திரபாபு நாயுடு தொடர்பான வழக்கை விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
முன்னதாக, 2014-19 தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் கோடிக் கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணை, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் சிஐடி (CID) தலைவர் சஞ்சய் மேற்பார்வையில் நடந்தது.
விசாரணையில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ. 371 கோடி முறைகேடு நடந்திருப்பதாக சிஐடி போலீஸார் தெரிவிக்க, கடந்த ஆண்டு செப்டம்பரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதையடுத்து, 50 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் அக்டோபர் கடைசியில் சந்திரபாபு நாயுடு ஜாமீனில் வெளியில் வந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க, ஜனசேனா கட்சியுடன் கூட்டணியமைத்து, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை ஆட்சியிலிருந்து வீழ்த்தினார்.
பின்னர், முதலமைச்சரான அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்குத் தொடர்பில்லை என அமலாக்கத்துறை தெரிவித்தது. மறுபக்கம், ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதோடு, மாநில பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்புத் துறை இயக்குநராக சஞ்சய் பணியாற்றியபோது சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க, விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கத்துறைக்கு சந்திரபாபு நாயுடு அரசு உத்தரவிட்டது.
விசாரணையில், ஒரு டெண்டர் விவகாரத்தில் டெக்னாலஜிஸ் அண்ட் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு ரூ. 1 கோடி ஒதுக்க சஞ்சய் தனது அதிரத்தைப் பயன்படுத்தியதாக விஜிலென்ஸும், அமலாக்கத்துறையும் தெரிவித்தது.
மேலும், விஜிலென்ஸ் தனது அறிக்கையில், சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறும், சஞ்சய் மீது மத்திய சேவை நடத்தை விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதன்படி, அகில இந்திய சேவைகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 1969-ன் விதி 3(1)-ன் கீழ் சஞ்சயை சஸ்பெண்ட் செய்ய பொது நிர்வாகத் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.