போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 290 பேர் கைது, 232 வழக்குகள் பதிவு!
சனிப்பெயர்ச்சியை நினைத்து கலக்கத்தில் உள்ளவர்களுக்கு!
விரைவில் சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. அனைத்து கிரங்களையும் போல, அதற்குண்டான காலக்கட்டத்தில் சனி பகவான் தனது பெயர்ச்சியை நடத்துகிறார்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் வருகிறது சனிப்பெயர்ச்சி என்று சும்மா இருப்பவர்களைக் கூட சீண்டிவிடுகிறார்கள். தங்கள் பாட்டுக்கு வேலை செய்துகொண்டிருப்பவர்களை எல்லாம் சனிப் பெயர்ச்சியாமே என்று நடுக்கம் காண வைக்கிறார்கள்.
ஏற்கனவே பல விடியோக்களைப் பார்த்து சனிப்பெயர்ச்சியை நினைத்து பயத்தில் இருப்பவர்களுக்கு ஒரே ஒரு உபாயம்தான். தமிழகம் மற்றும் நாட்டில் உள்ள சில அருமையான சனி பகவானுக்கு சிறப்பான கோயில்களைப் பற்றிய தகவல் இதோ.
சனி பகவான் கோயில் என்றாலே பலரும் முதலில் சொல்வது திருநள்ளாறு. ஆனால், அதை விடவும் சிறப்பு வாய்ந்த் கோயில் தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரர் கோயில்தான். இங்குள்ள சனீஸ்வரர் சுயம்புவாகத் தோன்றியவர்.
லிங்க வடிவில், பெரிய உருவமாக தனித்து நின்று, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
அடுத்து திருநாள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் திருக்கோயில். இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி, மூலவரான தர்பாரண்யேஸ்வரரையும், சனீஸ்வரரையும் வழிபாட்டால், துன்பங்கள் நீங்குவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
வேலூர் அருகே வாலாஜா பகுதியில் உள்ள வன்னிவேடு கிராமத்தில், அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள சனீஸ்வர பகவான், ஒற்றைக் காலில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கல்பட்டு எனும் கிராமத்தில் சனி பகவான் கோவில் உள்ளது. இங்கு உள்ள சனீஸ்வரர் இடது காலை பீடத்தின் மீதும், வலது காலை வாகனத்தின் மீதும் வைத்தவாறு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
வட திருநள்ளாறு என்று அழைக்கப்படும் சென்னை ஆதம்பாக்கம் விஸ்வரூப ஸ்ரீ சர்வ மங்கள சனீஸ்வர பகவான் கோயிலில் 6 அடி உயரத்தில் வீற்றிருக்கிறார் சனீஸ்வரர்.
தஞ்சையில், திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வரர் கோவில் பிரகாரத்தில் சூரியன் - சனீஸ்வரர் இருவரும் நேருக்கு நேர் பார்த்தவாரு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருக்கொள்ளிக்காட்டில் அமைந்துள்ள அக்னீஸ்வரர் ஆலயத்தின் இறைவனை சனி பகவான் வீழ்ந்து வணங்கி பொங்கு சனியாக மாறியதாக புராணங்கள் கூறுகின்றன. இங்கு சனி பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து சுமார பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரிச்சியூர் கிராமத்தில் உள்ள சிவாலயத்தில் தனி சன்னதியில் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார் சனீஸ்வர பகவான்.
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலுக்கு அருகே தேப்பெருமாநல்லூர் சிவன் கோயிலில், வீற்றிருக்கும் சனி பகவான், தான் ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன் என்று ஆணவத்துடன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவர் சிவபெருமானால் இரண்டு துண்டுகளாகக் கிழிக்கப்பட்டு, பிறகு அவரது அருளாலே உயிர் பெற்றதாக ஐதீகம். இங்குள்ள ஈசனையும், அம்மையையும் வழிபட்டு, பின் சனிபகவானை வழிபாடு செய்கிறார்கள்.
தஞ்சையின் நாச்சியார் கோவில் அருகே, ராமநாதசுவாமி கோயிலில், சனி பகவான், வேறு எங்கும் காணக் கிடைக்காத வகையில் தன் இரு மனைவிகளான மந்தா தேவி, ஜேஷ்டா தேவி மற்றும் மகன்கள் மாந்தி, குளிகன், தசரத மகாராஜாவுடன் எழுந்தருளியிருக்கிறார். குடும்பத்துடன் இங்கு அருள் புரிகிறார் சனீஸ்வரர்.
இது மட்டுமல்ல மயிலாடுதுறை அருகே குத்தாலம் கிராமத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயிலில், அடி காண முடியாத பாதாள சனீஸ்வரர், கையில் அமிர்தகலசத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இவர் சுயம்புமூர்த்தி. பொங்குசானியாக காட்சியளிக்கிறார்.
இந்திய அளவில் என்றால்.
மகாராஷ்டிர மாநிலம் சனி சிங்கனாப்பூர் எனும் ஊரில் உள்ள சனீஸ்வரர் திருக்கோயில். இங்குள்ள இறைவனும் சுயம்பு மூர்த்தியாக, சுமார் ஐந்தே முக்கால் அடி உயரத்தில் வீற்றிருக்கிறார்.
ஜெய்ப்பூர் செல்லும் சாலையில் வேன்வீட்டா எனும் ஊரில் உள்ள கோயிலில், சனீஸ்வரர் மிகப்பெரிய உருவத்தில் எருமை வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இவருக்குப் பின்னால் 8 கிரகங்களும் வீற்றிருக்கின்றன.
மேலும், பெருமாள் கோயில்களில், சக்கரத்தாழ்வார் தனிச் சன்னதியில் அருள் பாலிப்பது வழக்கம். இவரது பின்புறத்தில் நரசிம்மர் எழுந்தருளியிருப்பார். ஒரே நேரத்தில் சக்கரத்தாழ்வாரையும் நரசிம்மரையும் வழிபடுவதால் சனி அருகே நெருங்க மாட்டார் என்பது நம்பிக்கை.