பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தியடையச் சிறந்த வழி!
இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒளியாகவும், நீராகவும், நெருப்பாகவும், காற்றாகவும், நிலத்தின் உயிராகவும், ஆகாய தத்துவமாகவும் உள்ளடங்கிய ஒரு மங்கள ரூபம் கொண்ட அரூப சக்தி சிவன். அவரே ஆரம்பமும் முடிவும் உள்ளடங்கிய பரம்பொருள். இந்து சமயத்தில் சைவத்தின் கடவுளான சிவபெருமானின் ஐந்து முகங்களான சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை ஐந்தொழில்களான- படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகியவற்றைச் செயல்படுத்துவதாக சொல்லப்படுகிறது. ஒருசமயம் அனைத்து உயிர்களும் அழிவுற்ற நிலையில் இருக்கும்பொழுது அம்பிகையானவள் சிவனை நோக்கி விரதம் இருந்து, நான்கு கால பூஜையில் அர்ச்சனை செய்து வழிபட்டதாகவும் அன்றைய நன்னாளே மகாசிவராத்திரி ஆகும். அதன்பின்பு தான் எம்பெருமானால் உலகில் புதிய படைத்தல் என்ற நிகழ்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிவராத்திரி பூஜையில் கலந்துகொள்ளும் பொழுது நம்முடைய முக்திக்கான கடவுளின் பாதை அடையச் சிறந்த வழியை நமக்கு சிவன் அருள்வார். சிவபெருமான் லிங்க வடிவமாக உருவெடுத்த நாள் சிவராத்திரி என்று ஒருசிலரால் கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் தேய்பிறை சதுர்த்தசியில் வரும் ராத்திரியானது சிவனுக்கு உகந்த சிவராத்திரியாகக் கூறப்படுகிறது. அதுவே மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசியில் வரும் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்று ஆத்மகாரகன் சூரியன் கும்பத்தில் வீற்றிருப்பார். கும்பம் என்பது கலசம் என்று பொருள். அந்த கலசத்தில் உள்ள ஆத்மா என்பது நல்லவையா கெட்டவையா என்று தெரியாது. ஒருவேளை நமக்கே தெரியாமல் ஒரு சிறு அழுக்காக நம் ஆத்மா இருந்தால் அதை ஆன்மீக முறையில் சுத்தப்படுத்த வேண்டும். நம் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக மாற்ற மகாசிவராத்திரி பூஜை சிறந்தது. இந்த வழிபாடு என்பது மனத்தூய்மையையும், நல் முறையில் பொருளீட்டவும் மற்றும் கேட்கும் வரங்களையும் பெறவும் சரியான தருணம். கடவுள் ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு பொருளிலும், எல்லா இடங்களிலும் உள்ளும் புறமுமாக இருக்கிறார். அவர் உள்ளே இருக்கும்போது ஏகமாக அதாவது ஒரே ஒளியாகவும், அவரே வெளியில் பல பொருள்களில் பல தோற்றங்களுடன் அனேகமாக வியாபித்திருக்கிறார். இந்த தத்துவத்தையே மாணிக்கவாசகர் “ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க” என்று சிவபெருமானைப் போற்றுகின்றார்.
பதினொன்று என்னும் சக்தி
ராசிக்கட்டத்தில் கும்பம் 11ம் பாவமாகவும் மற்றும் மாசி என்பது மாதத்தின் 11வது எண்ணிக்கையில் வரும். சிவனின் சிவ தத்துவத்தைக் குறிக்கும் 11 என்பது ஏகாதச ருத்ரங்களாக சொல்லப்படுகிறது. முதல் 1 சிவம் அதற்கு அடுத்த 1 சக்தி தத்துவம் இரண்டும் ஒன்றாக சிவசக்தியாகும். இந்த மகா சிவராத்திரியில் 11வது ராசி, 11வது மாதத்தில், 11வது திதியில் நம்முடைய ஏகாதச (11) ருத்ரனுக்கு முக்கிய வழிபாடு செய்யப்படுகிறது. ஒருவரை மேலே ஏற்றி விடும் ஏணியாக 11ம் பாவத்தில் உள்ள சுபக் கிரகங்கள் உதவும். ஜாதகத்தில் அங்குக் கிரகங்கள் இல்லை என்றால் 11ம் வீட்டு அதிபதிகள் எந்த பாவத்தில் உள்ளதோ, அந்த பாவதை நல்லவிதமாக செயல்படுத்த உதவுவார். காலபுருஷ தத்துவப்படி 11ம் பாவம் என்பது கும்ப லக்கினம். அங்கு தான் நம்முடைய மறைக்கப்பட்ட உண்மைகள் பதுங்கி உள்ளது. உயிர் தத்துவம் கொண்ட கும்பம் என்பது மூடப்பட்ட குடமாகும். அதே சமயம் பதினொன்றாம் இடம் பாதகம் என்று இருந்தாலும் லாபத்தையும் கருத்தில் கொண்டு முதலில் லாபத்தைத் தந்துவிடுவார், அதன் பிறகு கர்மாவிற்கு ஏற்ப பாதகத்தையும் செய்து விடுவார். அதனால் தான் 11ம் பாவம் தொடர்ந்து 12ம் பாவம் என்பது நம்முடைய முக்தி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உணர்த்தும்.
ஆசைகளைப் பூர்த்தி செய்யும் இடமும் 11ம் பாவம் செயல்படுகிறது. இந்த பாவமானது திருப்திகரமான பண வரவு, பொன் பொருள் சேர்க்கை, பெண் ஆசை மற்றும் நிரந்தர சந்தோஷத்தை உணர்த்தும் இடம். ஒருமனிதனுக்கு ஆசை அளவுக்கு மீறி இருக்கக்கூடாது என்பதை உணர்த்தும் இடமாக 12ம் பாவம். ஒருவரின் லக்னத்திற்கு 12ல் சுபர் இருக்கும்பொழுது, அவர்கள் சுகமான தூக்கத்தையும், திருப்திகரமான சந்தோஷத்தையும் மற்றும் வீட்டில் சுப விரயத்தையும் பெறவல்லவர்கள். அதற்கு அவர்கள் தங்களின் அபரிமிதமான பொருள் செல்வத்திலிருந்து சிறிதேனும் இல்லாதவருக்குக் கொடுக்க வேண்டும். அதனால் அந்த நபருக்கு முக்கிய திருப்தியான சந்தோஷமும் மன அமைதியும் ஏற்படுத்தும். பதினோராம் பாவத்திற்கு 2ம் பாவம் மோட்ச ஸ்தானமாகும். அது அவர் நடந்துபோகும் இறுதி பாதையின் சரியான வழியைக் காட்டும் ஒரு கலங்கரை விளக்கம். இதுவே நம் ஜாதகக்கட்டத்தில் கடைசி பாவம். வாழ்க்கையில் உள்ள அனைத்து எதிர்மறைகளையும் அழிக்கும் ஒரு வலிமைமிக்க போர்வீரன் ருத்ர பகவான், 11 வடிவங்களில் தோன்றி பக்தர்களுக்கு நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள், 16 செல்வங்களுடன் கூடிய நிரந்தர மகிழ்ச்சியை அருளுகிறார்.
சிவராத்திரி அன்று தெரியாமல் செய்த வில்வ அர்ச்சனை, ஒரு சிலருக்கு அபரிமிதமான பலன்களை அள்ளிக் கொடுத்தது. மகாசிவராத்திரியில் சிவ பூஜை பற்றிய ஒரு சிறிய கதை.. வில்வமரத்தில் பல குரங்குகள் கூட்டமாகத் தங்கி இருந்தன அவற்றில் ஒரு ஆண் குரங்கு (முசு) காட்டில் மரத்தின் மீது வில்வ இலையைத் தெரியாமல் கடித்து கீழே போட்டது. அவை அனைத்தும் கீழே இருக்கும் சிவலிங்கத்தின் மேல் விழுத்தது. சிவபெருமான் அவருக்கு அடுத்த பிறவியில் சிறந்த அரசனாக வருவாய் என்று வரம் அருளினார். அதேபோல் அவர் அடுத்த மனித பிறவியில் சோழ நாட்டின் குரங்கு முகத்துடன் முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறவி எடுத்து மக்களுக்கும், சிவ மற்றும் முருக பக்தர்களுக்கும் நற்பணி ஆற்றினார். பின்பு அவரின் கடைசிக் காலத்தில் சிவனின் காலடியில் முக்தி பெற்றார். இவரைப் பற்றிய குறிப்புகள் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் புலி, நாரை, சிலந்தி, எறும்பு, எலி, யானை அனைத்தும் சிவராத்திரி அன்று பூஜை செய்து மோட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இன்னும் பல்வேறு பக்தர்கள் சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை செய்தவர்களின் கதைகளும் உண்டு.
மகா சிவராத்திரி வழிபாடு
சிவபெருமான் சூரிய அனலையும், உடலில் நெருப்பு தத்துவம் கொண்டவர். சிவ ருத்ரனுக்கு நம்மால் முடிந்த அளவு விரதம் இருந்து, அவருக்கு பசும்பால், பன்னீர், தயிர், தேன், சந்தனம் மற்றும் நீரால் அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்து, சிவபுராணம் மற்றும் ஓம் நமச்சிவாய மந்திரங்களை உச்சரித்து எம்பெருமானை மகிழ்விக்கலாம்.
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!
மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் அதாவது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை உள்ள நான்கு காலமும் பூஜைகளில் அவரை தரிசித்து வரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அவர் அன்று முழுவதும் நமக்கு வேண்டிய வரங்களைத் தரக் காத்திருக்கும் நம் தகப்பன். சிவ பெருமானுக்காக இருக்கும் ராத்திரி சிவராத்திரியாகவும், விஷ்ணுவுக்காக இருக்கும் ராத்திரி வைகுண்ட ஏகாதேசியாகவும் கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் உருவும் அருவும் அருவுருவம் என்று மூன்று வகையான திருமேனி கொள்ளும் பரசிவன் நிலைபெற்ற பல உயிர்களுக்கும் கற்பக விருட்சம் போல வேண்டுவாருக்கு வேண்டியதைக் கொடுக்கும் வள்ளல். மகாசிவராத்திரி நாளில் உடலில் ஒரு புத்துணர்வு சக்தி வெளிப்படும் என்று யோகாவில் கூறப்படுகிறது. அன்று படுத்த நிலையில் இல்லாமல் உடல் நேர் நிலையில் வைத்திருப்பது நன்று.
கும்பம் ஸ்திர தன்மையுடன் அழியாமல் ஒருவன் நிலையாக இருக்க சிவம் என்ற சூரிய ஒளி நம்மிடையே மிளிர இந்த சிவராத்திரி நமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். காற்று தத்துவம் குறிக்கும் இந்த ராசி, நம் உடலையும் உடலில் உள்ள மூச்சுக் காற்றைச் சமநிலைப்படுத்தி, ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நம்மை அறியாமல் பரம்பொருளை அடைய முடியும். வரவிருக்கும் மகா சிவராத்திரியில் அருகிலுள்ள உள்ள பழம்பெரும் சிவாலயங்களுக்கு மற்றும் குலதெய்வ கோயிலுக்குச் சென்று சிவ வழிபாடு செய்யலாம். அன்றைய தினம் முடிந்த அளவு மற்ற எதிர்மறை மற்றும் துர்சக்திகளை நினைக்காமல் கடவுளை ஆராதனை செய்து அவர் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவோம்.