`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின்...
Trump : `ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி..!' - உக்ரைன் அதிபருக்கு எதிராக திரும்பும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது?
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியதாகவும் செய்திகள் வெளியானது.
இதற்கிடையே சவுதி அரேபியாவில் கடந்த 18-ம் தேதி அமெரிக்கா, ரஷ்யா உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோர் பங்கேற்றனர்.
`உக்ரைன் அழைக்கப்படவில்லை’
இந்தப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது. அதைத் தொடர்ந்து, ரஷ்யா அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ``உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து சவுதி அரேபியாவில், அமெரிக்காவும், ரஷ்யாவும் நேர்மறையான, ஆக்கபூர்வமான நான்கு மணி நேர சந்திப்பை நடத்தின. தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்" என்றார்.
`உக்ரைன் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது’
இதற்கு பதிலளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காததால் அதில் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு பேச்சு வார்த்தையும் நியாயமானதாக இருக்க வேண்டும். உக்ரைனில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து உக்ரைன் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ட்ருத் சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``தேர்தல்கள் இல்லாத ஒரு சர்வாதிகாரிதான் ஜெலன்ஸ்கி. அவர் வேகமாக நகர்ந்துவிடுவது நல்லது. இல்லையெனில் அவருக்கென ஒரு நாடு கூட இருக்கப் போவதில்லை. அவர் தேர்தல்களில் பங்கெடுக்க மறுக்கிறார். உக்ரேனிய கருத்துக் கணிப்புகளில் அவருக்கான ஆதரவுக் கூட மிகக் குறைவு. ஜெலன்ஸ்கியின் திறமையான ஒரே விஷயம் பைடனை 'ஒரு பிடில் போல' வாசித்திருப்பதுதான். ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதை ட்ரம்ப் நிர்வாகத்தால் மட்டுமே செய்ய முடியும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play