அப்பாடா.. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பூண்டு விலை!
கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கம் விலை போல, கையில் எடுத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது.
ஒரு கிலோ பூண்டு எவ்வளவு என்று கேட்ட நிலை மாறி, 100 கிராம் பூண்டு விலை கேட்டு, அது கொடுத்த அதிர்ச்சியில், 50 கிராம் பூண்டு மட்டும் வாங்கிக் கொண்டு இதை இன்னும் எத்தனை வாரத்துக்கு வைத்து சமாளிக்கலாம் என்று சிந்திக்க வைத்திருந்தது இல்லத்தரசிகளை.
ஒரு மாதம் இரண்டு மாதம் என்றில்லாமல், ரூ.400 என்ற நிலையிலேயே பல நாள்கள் பூண்டு இருந்ததால், அவ்வளவுதான், இனி பூண்டு குழம்பெல்லாம் வைக்கவே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவில் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
தற்போது வட மாநிலங்களிலிருந்து புதிதாக பூண்டு வரத்து அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், பிப்ரவரி 17 நிலவரப்படி, கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.125க்கு விற்பனையானது. பிறகு அது தற்போது ரூ100- என்ற அளவுக்குக் குறைந்திருக்கிறது.
இது படிப்படியாக சில்லறை விற்பனைக் கடைகளிலும் எதிரொலிக்கலாம். அல்லது ஒரு சில வாரங்கள் கூட ஆகலாம் என்பதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.