மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கியது எப்படி?
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், டாக்டர் மூா்த்தி சாலையைச் சேர்ந்தவர் சார்லஸ் (63). இவர் கடந்த ஜனவரி 8ம் தேதி, தனது மகனைச் சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காகக் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்திருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்க்க, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.30,000 திருடு போயிருந்தது. இது தொடர்பாகக் கும்பகோணம் கிழக்கு போலீஸில் சார்லஸ் புகார் அளித்தார்.

இந்த நிலையில், கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பூட்டிய வீடுகளில் பணம், நகை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்தன. யார் திருட்டில் ஈடுபடுகிறார்கள் என்கிற எந்த தடயமும் போலீஸுக்கு கிடைக்கவில்லை. அதனால், கொள்ளை கும்பலைப் பிடிக்க வேண்டிய நெருக்கடிக்கு போலீஸ் ஆளாகினர்.
இதையடுத்து, கும்பகோணம் டி.எஸ்.பி கீர்த்திவாசன், தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சார்லஸ் வீடு உள்ளிட்ட கும்பகோணம் பகுதியில் நடந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது பந்தநல்லுார் அருகே சாயினாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசைமணி (25) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைக் கைது செய்து விசாரித்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து தனிப்படை போலீஸ் டீமில் பேசினோம். "ஆசைமணி கொத்தனார் வேலை செய்பவர். வேலைக்குச் செல்லும் பகுதிகளில் ஆள் இல்லாமல் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவார். பின்னர் பகலில் கொத்தனார் வேலையை முடித்து விட்டு இரவு அந்த வீட்டுக்குள் புகுந்து திருட்டை அரங்கேற்றுவார். நகை, பணம் எது கையில் கிடைத்தாலும் அள்ளிக்கொண்டு வெளியேறி விடுவார். திருட்டில் கிடைத்த பணத்தில் வீட்டுக்குத் தேவையானதை வாங்கி கொடுத்து விட்டு மீதியை நண்பர்களுடன் சேர்ந்து மது பார்ட்டி வைத்து ஜாலியாக பொழுதைக் கழிப்பார். இது தான் ஆசைமணியின் லைப் ஸ்டைலாக இருந்துள்ளது.

கையில் இருக்கும் பணம் கரைந்த பின்னர் அடுத்த வீட்டுக்குள் புகுந்து விடுவார். கொள்ளையடித்த போது நிறையத் தலைமுடி, தாடியென்று இருப்பார். போலீஸ் தன்னை நெருங்குகிறார்கள் என்பது தெரிந்ததும் சிக்காமல் இருக்கத் தலைமுடி, தாடியைக் குறைத்து விட்டார். இரண்டு வாரம் கழித்து க்ளீன் சேவ் செய்து கொண்டு மொட்டை அடித்த மாதிரி முடியை வெட்டி விட்டார். கெட்டப் சேஞ்ச் செய்து தப்பித்து வந்தார். செல்போன் பயன்படுத்தும் பழக்கம் அவருக்கு இல்லாததால் அவரைப் பிடிப்பது சவாலாக இருந்தது. இந்நிலையில் பொறி வைத்த அவரைப் பிடித்தோம். ஆசைமணி மீது கோவை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது" என்று தெரிவித்தனர்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play