தில்லியில் பாஜகவின் ஆதரவு அணியாக செயல்பட்டது காங்கிரஸ்: ராகுலுக்கு மாயாவதி பதிலட...
மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..
மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த வீடுகளை பெற ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.
1989-94ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவும், அவரது சகோதரர் விஜயும் சேர்ந்து தாங்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் என்று கூறி அரசாங்கத்திடமிருந்து மலிவு விலை வீடுகளை வாங்கினர். அவர்கள் தங்களது ஆண்டு வருமானம் 30 ஆயிரம் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதற்காக அவர்கள் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

உண்மையில் அவர்கள் இருவரும் அப்போது கூட்டுறவு தொழிற்சாலை ஒன்றில் உறுப்பினர்களாகவும், 25 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களாகவும் இருந்தனர். அவர்கள் இரண்டு பேரும் போலி ஆவணங்களை தாக்கல் செய்து அரசாங்கத்தை ஏமாற்றி மலிவு விலை வீட்டை வாங்கியதாக கூறி புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து 1995ம் ஆண்டு இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை கடந்த 30 ஆண்டுகளாக நாசிக் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ரூபாலி, குற்றம் சாட்டப்பட்ட சகோதரர்கள் இரண்டு பேருக்கும் அரசாங்கத்தை ஏமாற்றி வீடு வாங்கியதற்காக 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இரண்டு பேரும் ஏழைகள் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இரண்டு பேரும் ஏழைகளுக்கு கிடைக்கவேண்டிய சொத்தை ஏழைகளிடமிருந்து பறித்து இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அதோடு இருவருக்கும் ஒதுக்கப்பட்ட வீட்டை ரத்து செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இரண்டு பேரும் மேல் முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்கும் கோர்ட் ஜாமீன் வழங்கியது. மாணிக்ராவ் தற்போது அமைச்சராக இருக்கிறார். அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் சட்டப்படி அவரது எம்.எல்.ஏ.பதவி பறிபோகும்.
இதற்கு முந்தைய காலக்கட்டங்களில் கோர்ட் தீர்ப்பு வந்தவுடன் எம்.எல்.ஏ., எம்.பி பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது. கோர்ட் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மாணிக்ராவ் ,30 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் உள்நோக்கத்தோடு இவ்வழக்கு தொடரப்பட்டது. தீர்ப்பை முழுமையாக படிக்கவில்லை. அதை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்'' என்று தெரிவித்தார்.