`வாழ்க்கை சிறப்பாக அமைய பூஜைகள்' - போலி ஜோதிடரிடம் ரூ.6 லட்சம் இழந்த 24 வயது பெண் - நடந்தது என்ன?
பெங்களூரைச் சேர்ந்த 24 வயது பெண் இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்துகொண்ட போலி ஜோசியக்காரரிடம் 6 லட்சம் வரை ஏமாந்திருக்கிறார்.
தனது திருமணம் குறித்து அறிந்துகொள்ள ஜோசியக்காரரை நாடிய பெண், மூளைச்சலவை செய்யப்பட்டு ஜோதிட சடங்குகள், பூஜைகள் போன்ற காரணங்களுக்காக பணத்தை வாரி இரைத்துள்ளார்.
பெங்களூரு எலெக்ட்ரானிக்ஸ் சிட்டியில் வசிக்கும் அந்த பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் ஏப்படி ஏமாற்றப்பட்டார் என்பதை எடுத்துரைக்கும்விதமாக புகார் ஒன்றை காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த ஜனவரி 5ம் தேதி அந்த பெண், spl no 1 indian astrologer என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்துள்ளார். ஒரு அகோரியின் படத்துடன் ஜோதிட நிபுணர் என அதில் போடப்பட்டிருக்கிறது. தனது வருங்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அந்த கணக்குக்கு மெஸ்ஸேஜ் செய்துள்ளார். அப்போது விஜயமார் எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் இவருடன் பேசியுள்ளார்.
வாட்ஸப்பில் தனது விவரங்களைப் பகிர்ந்துள்ளார் அந்த பெண். மறுமுனையிலிருந்து, அவருக்கு காதல் திருமணம் நடைபெறும் என்றும், ஆனால் ஜாதகப்படி அதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அந்த ஜாதக சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சிறப்பு பூஜைகள் செய்வதாக கட்டணம் வசூலித்துள்ளார். முதன்முதலாக 1,820 ரூபாய் அனுப்பும்போது அது சிறிய தொகையாக தோன்றியதால் எந்த தயக்கமும் இல்லாமல் அனுப்பியுள்ளார்.
ஆனால் அது வெறும் தொடக்கம்தான். சில காலத்தில் விஜயகுமார், அந்த பெண்ணின் வருங்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க பல பூஜைகள் செய்ய வேண்டும் என்றுக் கூறி பல கட்டணங்களை வசூல் செய்துள்ளார். இதில் தான் ஏமாற்றப்படுகிறோமோ என பிரியாவுக்கு சந்தேகம் வந்தபோது அவர் கிட்டத்தட்ட 6 லட்சம் ரூபாய் அனுப்பியிருந்திருக்கிறார்.
அந்த பெண், ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தனது பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார். அவருக்கு 13,000 அளித்த அந்த நபர், இனி மீதமுள்ள பணத்தைக் கேட்டால் அவரது பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார் விஜயகுமார்.
அதைத் தொடர்ந்து ப்ரசாந்த் என்ற நபர் அந்த பெண்ணுக்கு போன் செய்துள்ளார். தன்னை வழக்கறிஞர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக குமார் தற்கொலை செய்யும் நிலையில் இருக்கிறார் என பயமுறுத்தியுள்ளார்.
இந்த நேரத்தில் ஏதோ பெரிய திருட்டில் அகப்பட்டிருப்பதாக அந்த பெண் உணர்ந்து, காவல்துறையை நாடியுள்ளார். இது சைபர் க்ரிமினல்களின் வேலையாக இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். உண்மையான ஜோதிடருக்கோ, வழக்கறிஞருக்கோ இதில் தொடர்பு இருக்காது என்றும் கூறுகின்றனர்.
இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது போன்ற திருட்டுகளில் யாரும் சிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.